அமலை செடியால் நீரோட்டம் பாதிப்பு: நெல்லை கால்வாய் அடைப்பை நீக்கிய விவசாயிகள்

நெல்லை: நெல்லை டவுன் பகுதியில் கால்வாயில் ஏற்பட்ட அமலைச்செடி அடைப்பை விவசாயிகள் நீக்கினர். நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக அனைத்து கால்வாய்களிலும் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் விவாசாயிகள் பிசான சாகுபடியை மும்முரமாக மேற்கொண்டுள்ளனர். அதே நேரத்தில் பல கால்வாய்கள் முழுமையாக தூர்வாரப்படவில்லை. இதனால் கடந்த ஓராண்டாக கால்வாயில் குவிந்திருந்த குப்பை, அமலை செடி போன்றவைகளால் ஆங்காங்கே நீரோட்டத்திற்கு தடை ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் வேகமாக செல்வதில் தடங்கல் நிலவுகிறது. நெல்லை டவுன் நெல்லை கால்வாய் பகுதியிலும் அமலை அடைப்பு பல பகுதிகளில் அதிகமாக உள்ளன.

டவுன் சேரன்மகாதேவி சாலை அருகே நெல்லை கால்வாய் கடக்கும் பாலத்தின் பகுதியில் அமலைச்செடிகள் மற்றும் கழிவுகள் அடைத்திருந்ததால் நீர் செல்ல தடையேற்பட்டது. இதனையடுத்து பாசன விவசாயிகள் கால்வாயில் இறங்கி சுத்தப்படுத்தினர். இதுபோல் பாளையங்கால்வாயிலும் சில பகுதிகளில் ஏற்பட்டுள்ள அடைப்பை விவசாயிகளே சீரமைத்தனர். தாமிரபரணி பாசன கால்வாய் பொதுப்பணித்துறையினரும் நீரோட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: