அயோத்தியில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி: மாநில முதல்வர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்

புதுடெல்லி: சட்டம் - ஒழுங்கை நிலைநாட்ட போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு, மாநில முதல்வர்களுக்கு உள்துறை அமைச்சர்  அமித்ஷா வலியுறுத்தியுள்ளார். நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை அளித்துள்ளது.  அதன்படி அயோத்தியில் இஸ்லாமியர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு  உத்தரவிட்டுள்ளது. மேலும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்து அமைப்புகளுக்கே என்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.

சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை ஒன்றை 3  மாதத்தில் உருவாக்க மத்திய அரசுக்கு அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. அறக்கட்டளை மேற்பார்வையில் அயோத்தியில் ராமர் கோயில்  கட்டும் பணி நடைபெற வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சன்னி வக்பு வாரியத்திற்கு 5 ஏக்கர் நிலம் மத்திய, மாநில  அரசுகளால் வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையொட்டி, நாடு முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள்  செய்யப்பட்டுள்ளன.

இதற்கிடையே, அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம்; ஆனால் திருப்தி இல்லை என்று அனைத்திந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட  வாரியத்தின் வழக்கறிஞர் ஜிலானி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று சன்னி வக்பு வாரியம்  அறிவித்துள்ளது. தீர்ப்புக்கு எதிராக எங்கும் எந்த போராட்டமும் நடத்த கூடாது வழக்கறிஞர் ஜிலானி வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அனைத்து மாநில முதல்வர்களுடன்  தொடர்பு கொண்டு ஆலோசனை நடத்தியுள்ளார். அப்போது, சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி கேட்டு  கொண்டார்.

Related Stories: