எனக்கு காவி சாயம் பூச பாரதிய ஜனதா முயற்சி: ரஜினிகாந்த் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: சென்னை போயஸ் கார்டனிலுள்ள தனது வீட்டுக்கு வெளியே நேற்று நிருபர்களை சந்தித்தார் ரஜினிகாந்த். அப்போது அவர் கூறியதாவது: திருவள்ளுவர் மிகப்பெரிய ஞானி. சித்தர். ஞானிகள், சித்தர்களை மதம் ஜாதி  எல்லைக்குள் கட்டுப்படுத்த முடியாது. அவர்கள் அதற்கு அப்பாற்பட்டவர்கள்.  திருவள்ளுவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர். அது அவரது குறள் மூலம் தெரியும்.  அவர்  நாத்திகர் அல்ல. ஆத்திகர். இதை யாரும் மறைக்க முடியாது. மறுக்கவும் முடியாது.  திருவள்ளுவருக்கு பாஜ அலுவலகத்தில் காவி உடை அணிவித்தது அவர்களது தனிப்பட்ட  விஷயம். அதற்காக ஊரில் உள்ள சிலைகளுக்கு பட்டையை போட வேண்டும் என அவர்கள் சொல்லவில்லை. மீடியாதான் இதை பெரிதாக்கியது. ஊரில்  நிறைய பிரச்னை இருக்கும் போது, இந்த விவகாரத்தை பற்றி  பேசுவது அற்பத்தனமானது. தேவையற்றது.

பாஜவில்  சேரவோ, தலைவராக்கவோ யாரும் என்னை அழைக்கவில்லை. ஆனால் திருவள்ளுவருக்கு  காவி சாயம் பூச  முயற்சி நடப்பது போல், எனக்கும் காவி சாயம் பூச முயற்சி நடக்கிறது.  இதில்  திருவள்ளுவரும் மாட்ட மாட்டார்.  நானும் மாட்டிக் கொள்ள மாட்டேன்.   எப்போதும் நான் வெளிப்படையாக  பேசுகிறேன். வரும் உள்ளாட்சி தேர்தலில் நான் போட்டியிடவில்லை. அரசியல் கட்சி அறிவிக்கும் வரை தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன். எம்ஜிஆர் முதல்வர் ஆகும் வரை  திரைப்படங்களில் நடித்து வந்தார்.  நாட்டில் பொருளாதார மந்த நிலை நிலவுகிறது. இதைப் போக்க அரசு  விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசியலில் ஆளுமைக்கான சரியான  தலைமைக்கு வெற்றிடம் உள்ளது. அயோத்தி நில தீர்ப்பு எப்படி  வந்தாலும் மக்கள்  அமைதி காக்க வேண்டும்.

குழந்தைகள் பாதுகாப்பு விவகாரம் தொடர்பாக என் மனைவி லதா முதல்வரை சந்திக்கிறார்.

Related Stories: