ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து அரசு பள்ளிகளில் மாணவர்கள் குறைவது பற்றி ஆய்வு செய்ய வேண்டும்

மதுரை: இலவச கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தை சீராய்வு செய்யக்கோரிய வழக்கில், அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என ஐகோர்ட் கிளை நீதிபதிகள் தெரிவித்தனர். கரூர் மாவட்டம், குளித்தலையை சேர்ந்த மது, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கட்டாயக்கல்வி உரிமை சட்டத்தின் கீழ் கடைப்பிடிக்கப்படும் வழிமுறைகளால் எவ்விதத்திலும் கல்வியின் தரம் உயரவில்லை. எனவே இச்சட்டத்தை சீராய்வு செய்ய வேண்டும். மேலும், வேறு பள்ளிக்கு மாறும்போது, மாற்றுச்சான்றை கட்டாயமாக்க வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.  

இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், ‘‘தற்போது கல்வியின் தரம் மோசமாகி வருகிறது. இதனால் அடுத்த 2 ஆண்டுகளில் 4 ஆயிரம் அரசுப்பள்ளிகளை மூட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அரசு தரப்பு வழக்கறிஞர், ‘பள்ளிகளை இணைக்க மட்டுமே அரசுக்கு திட்டம் உள்ளது’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவது குறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும். இந்த மனு  தொடர்பாக பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் மற்றும் பள்ளி கல்வித்துறை இயக்குநர் ஆகியோர் பதிலளிக்கவேண்டும்’’ என உத்தரவிட்டு, வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: