கருப்புப் பணத்தை மீட்க புதிய ‘அம்னெஸ்டி’ திட்டம்: மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் அமைத்த உயர்மட்ட ஆலோசனைக் குழு பரிசீலனை

டெல்லி: மத்திய வர்த்தகத் துறை அமைச்சகம் அமைத்த உயர்மட்ட ஆலோசனைக் குழு, கருப்புப்பணத்தை மீட்க புதிய ‘அம்னெஸ்டி’  என்ற திட்டத்தைக் கொண்டு வர பரிந்துரை செய்துள்ளது. இந்த முன்மொழியப்பெற்ற திட்டத்தின் படி கணக்கில் வராத சொத்துக்களை வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச வரியைச் செலுத்தி தங்கள் சொத்துக்கள் விவரங்களை அளிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் கணக்கில் வராத சொத்துக்களில் 40% சொத்துக்களை ‘எலிஃபண்ட் பாண்ட்’ என்று அழைக்கப்படும். நீண்ட கால உள்கட்டமைப்பு பத்திரங்களில் கருப்புப் பணதாரர்கள் முதலீடு செய்ய வேண்டும். இந்தப் பத்திரங்கள் மூலம் திரட்டப்படும் தொகை உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும். நாட்டின் வாணிபம் முதலீடுகளைப் பெருக்க பரிந்துரைகளை மேற்கொள்ளுமாறு உயர்மட்ட ஆலோசனைக் குழுவிடம் மத்திய வர்த்தக அமைச்சகம் கேட்டிருந்தது.

எலிஃபண்ட் பத்திரங்களில் தங்கள் கருப்புப் பணத்தை முதலீடு செய்பவர்கள், தங்கள் கணக்கில் வராத சொத்துக்களின் மீது 15% வரி செலுத்த வேண்டும். அறிவிக்கப்பட்ட கணக்கில் காட்டப்படாத சொத்துக்களில் 40%-ஐ நீண்ட கால அரசுப் பத்திரங்களில் முதலீடு செய்ய வேண்டும். இந்தப் பத்திரங்கள் மீதான கூப்பன் வட்டி LIBOR என்று அழைக்கப்படும் லண்டன் இண்டர் பேங்க் வட்டி விகிதத்துடன் இணைக்கப்படும். எலிஃபண்ட் பாண்ட் மூலம் வரும் வட்டி வருவாய்க்கும் வரி செலுத்த வேண்டும். வட்டி மீதான வரி விகிதம் 75% ஆக இருக்கலாம். இந்த யானைப் பத்திரங்களின் முதிர்ச்சிக் காலம் 20 முதல் 30 ஆண்டுகள் வரை இருக்கலாம். தண்டனை, சட்ட நடவடிக்கை உள்ளிட்டவற்றிலிருந்து பாதுகாப்பு பெற விரும்புவோர் இந்தத் திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

உயர்மட்ட ஆலோசனைக் குழு தனது பரிந்துரையில், எலிஃபண்ட் பாண்ட் மூலம் தன் கணக்கில் வராத சொத்துக்களை வெளியில் கொண்டு வருபவர் மீது அன்னியச் செலாவணி சட்டம், கருப்புப் பணச் சட்டம், வரிவிதிப்புச் சட்டம் ஆகியவை பாயாது என்று தெரிவித்துள்ளதாக ஐ.ஏ.என்.எஸ். பிரத்யேக செய்தி ஒன்று கூறுகிறது. இதற்கு அரசு ஒப்புதல் அளித்தால் அயல்நாட்டில் உள்ள கருப்புப் பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வருவதில் முதல் முறையாக அம்னெஸ்டி திட்டம் கொண்டு வரப்படுவதாக அமையும். 2016-ல் பிரதம மந்திரி காரிப் கல்யாண் டெபாசிட் திட்டம் கொண்டு வரப்பட்டது, ஆனால் அதில் கணக்கில் வராத சொத்துக்களை அறிவிப்பவர்களுக்கு வரிவிதிப்புகள் அதிகமாக இருந்ததோடு நிதிமுறைகேடுச் சட்டம், ஊழல் தடுப்புச் சட்டம் ஆகியவையும் பாயும் என்ற நிலை இருந்ததால் இந்தத் திட்டம் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் உயர்மட்ட ஆலோசனைக்குழு இந்த எலிஃபண்ட் பாண்ட் திட்டத்தை பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிகிறது.

Related Stories: