ஜீவன் ஆனந்த், ஜீவன் உமங் உட்பட பல காப்பீடு திட்டங்களை ரத்து செய்கிறது எல்ஐசி

புதுடெல்லி: எல்ஐசி நிறுவனம் பிரபல காப்பீட்டு திட்டங்கள் சிலவற்றை இந்த மாதத்துடன் வாபஸ் பெற உள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ப ஏராளமான காப்பீட்டு திட்டங்களை எல்ஐசி அறிமுகம் செய்து வந்துள்ளது. இவற்றில் ஜீவன் ஆனந்த், ஜீவன் உமங், ஜீவன் லக்ஷ்யா போன்ற சில காப்பீடு திட்டங்கள் மக்களிடையே வரவேற்பு பெற்ற பிரபல திட்டங்கள். ஆனால் இவை உட்பட சில திட்டங்களை இந்த நிறுவனம் வாபஸ் பெற உள்ளது. இதுகுறித்து எல்ஐசி அதிகாரிகள் சிலர் கூறியதாவது: இந்திய காப்பீடு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம், பங்குச்சந்தையுடன் தொடர்புடைய காப்பீடு திட்டங்கள் மற்றும் பிற காப்பீடு திட்டங்கள் தொடர்பாக கடந்த ஜூலை 8ம் தேதி வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இந்த புதிய விதிகளின் அடிப்படையில், சுமார் 20 முதல் 25 தனிநபர் காப்பீடு திட்டங்கள், 8 குழு காப்பீடு திட்டங்கள் உட்பட பல காப்பீடு திட்டங்கள் இந்த மாத இறுதியுடன் முடிவுக்கு வருகின்றன. அதில் இவற்றில் ஜீவன் ஆனந்த், ஜீவன் உமங், ஜீவன் லக்ஷ்யா, ஜீவன் லாப் போன்ற சில காப்பீடு திட்டங்களும் அடங்கும். ரத்து செய்யப்படும் இந்த காப்பீடு திட்டங்கள் புதிய விதிகளுக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படும் என எல்ஐசி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. புதிய விதிகள் காரணமாக, பல காப்பீட்டு நிறுவனங்களின் சுமார் 80 காப்பீடுகள் இந்த மாதத்துடன் வாபஸ் பெறப்படும் என தெரிகிறது.

Related Stories: