அம்பத்தூர் ஆறாக்குளத்தை சுற்றிலும் தடுப்பு சுவர் இல்லாததால் விபத்து

அம்பத்தூர் : அம்பத்தூர் அடுத்த கருக்கு, ஆறாக்குளத்தில் தடுப்பு சுவர் இல்லாததால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அம்பத்தூர் அடுத்த கருக்கு, பெரியார்

சாலையில் 100 சென்ட் பரப்பளவில் ஆறாக்குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றி குடியிருப்புகள், ரயில் நிலையம், அம்மா உணவகம், பஸ் நிறுத்தம், பள்ளிக்கூடங்கள் உள்ளன. இந்த குளத்தை ஒட்டிய சாலை வழியாக அம்பத்தூர், கருக்கு, கள்ளிக்குப்பம், மேனாம்பேடு புதூர், கொரட்டூர், பாடி ஆகிய பகுதியை சேர்ந்த மக்கள் சென்று வருகின்றனர். மேலும், அம்பத்தூரில் இருந்து சென்னை மாநகருக்கு சிடிஎச்  சாலை வழியாக சென்றால் போக்குவரத்து நெரிசலுடன், மிகவும் காலதாமதம் ஏற்படுகிறது. இதனால் பல வாகன ஓட்டிகள் கருக்கு, பெரியார் சாலை வழியாக தான் செல்கின்றனர்.

இந்நிலையில் சுற்றி உள்ள குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் விடப்படுவதால் ஆறாக்குளம் கழிவுநீர் குட்டைபோல காட்சியளிக்கிறது.

இதனால் சுற்றியுள்ள பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருகிறது. இதில் இருந்து கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி குடியிருப்புக்குள் படையெடுத்து வருகின்றன. இவைகள்  பெரியவர் முதல் சிறுவர் வரை கடிக்கின்றன. இதனால், குடியிருப்போருக்கு டெங்கு, சிக்கன்குனியா உள்ளிட்ட பல்வேறு மர்ம காய்ச்சல்கள் பரவி வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘இந்த குளம் சமீபகாலமாக தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது. இந்த குளத்தில் பரப்பளவு சுருங்கி கொண்டே வருகிறது. மேலும் குளத்தை ஒட்டிய பெரியார் சாலையில் கரைகள் இல்லை.இதனால் அந்த சாலையில் வேகமாக வரும் வாகனங்கள் திடீரென்று குளத்துக்குள் பாய்கின்றன. குறிப்பாக சமீப காலத்தில் ஒரு ஆட்டோ, இரண்டு பைக்குகள் குளத்திற்குள் சென்று விபத்தில் சிக்கியுள்ளன. மேலும் அவ்வழியாக சைக்கிளில் வரும் பள்ளி மாணவர்களும் சில நேரங்களில் குளத்தில் தவறி விழுகின்றனர். அவர்களை பொதுமக்கள் அவ்வப்போது காப்பாற்றுவதும் தொடர்கதையாக நடந்து வருகின்றது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலமுறை சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் புகாரளித்துள்ள போதிலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே குளத்தை சுற்றிலும் கரைகள் அமைக்க வேண்டும் அல்லது சாலை பகுதியில் தடுப்பு சுவர் கட்ட வேண்டும். மேலும் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், கழிவுநீர் கலப்பதை தடுக்கவும் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

Related Stories: