பாளையங்கோட்டை போலீசுக்கு ‘சபாஷ்’பள்ளிக்கு டிமிக்கி கொடுத்த மாணவர்களை 1330 திருக்குறள் எழுத வைத்த போலீசார்

நெல்லை: பாளையங்கோட்டையில் பள்ளி செல்லாமல் சுற்றித் திரிந்த மாணவர்களை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார், பெற்றோரை அழைத்து அவர்கள் முன்னிலையில் 1330 திருக்குறளை எழுத வைத்து, அறிவுரை கூறி அனுப்பினர். நெல்லை மாநகர பகுதியில் மாணவர்கள் சிலர் பள்ளி செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சீருடையுடன் வெளிப்பகுதியில் சுற்றித் திரிகின்றனர். இதுகுறித்து கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளி நிர்வாகங்கள் சார்பில் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில் பாளையங்கோட்டை பஸ் நிலையம், வஉசி விளையாட்டு மைதானம், அரசு அருங்காட்சியகம், வாட்டர் டேங்க் உள்ளிட்ட பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், வகுப்புகளுக்கு செல்லாமல் பள்ளி சீருடையில் சுற்றித்திரிந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்களை பிடித்து பாளை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன், மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். பின்னர் அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மாணவர்களை ஒரு நோட்டு, திருக்குறள் புத்தகம் வாங்கி வரச்சொல்லி 1330 திருக்குறளையும் நோட்டில் எழுதி காண்பித்து விட்டு  பெற்றோருடன் செல்லலாம் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து அவர்களது பெற்றோர் அவசரம் அவசரமாக நோட்டு, திருக்குறளை வாங்கி கொடுத்ததும் மாணவர்கள் காவல் நிலைய வளாகத்தில் அமர்ந்து திருக்குறளை எழுத துவங்கினர். பாளை போலீசாரின் இந்த நடவடிக்கை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாளை. வஉசி மைதானத்தில் நடந்த விளையாட்டுப் போட்டிகளுக்கு பிறகு இரு பள்ளி மாணவர்களிடையே எழுந்த வாக்குவாதம் மோதலானது. மாணவர்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்களது பெற்றோரை அழைத்து எச்சரித்து போலீசார் அறிவுரை கூறினர். எனவே மாணவர்கள் படிக்கும் காலத்தில் சுற்றித் திரிவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் நல்லொழுக்கம் பேண வேண்டும் என்பதற்காக திருக்குறள் எழுத வைத்த இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜனுக்கு நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Related Stories: