ராஜிவ் காந்தி கொலை சதி விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவு

புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை சதி தொடர்பாக விசாரித்து வரும் சிபிஐ தலைமையிலான எம்டிஎம்ஏ குழு தனது சமீபத்திய அறிக்கையை 4 வாரத்தில் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக்கு பின்னணியில் நடந்த சதி தொடர்பாக விசாரணை நடத்த சிபிஐ தலைமையிலான பல்நோக்கு கண்காணிப்பு குழு (எம்டிஎம்ஏ) கடந்த 1998ல் அமைக்கப்பட்டது. இக்குழுவில் சிபிஐ, ரா மற்றும் பிற உளவு அமைப்பின் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். இக்குழு கடந்த 2017ல் ராஜிவ் காந்தியை கொல்ல பயன்படுத்தப்பட்ட பெல்ட் வெடிகுண்டு தொடர்பாக தனது அறிக்கையை சமர்பித்தது. இதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு மார்ச் 14ம் தேதி, விசாரணையின் அப்போதைய நிலவரம் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் விசாரிக்க அந்நாட்டு நீதிமன்றங்களிடம் அனுமதி கோரி கடிதம் அனுப்பப்பட்டு இருப்பதாக எம்டிஎம்ஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. எம்டிஎம்ஏ தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த் ஆஜரானார். அப்போது நீதிபதிகள், ‘கடந்த ஓராண்டுக்கு முன்பான எம்டிஎம்ஏ.வின் கடைசி அறிக்கையில், வெளிநாட்டில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்த முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி, இலங்கை, தாய்லாந்து மற்றும் பிற நாட்டில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தியதன் தற்போதைய நிலை குறித்த சமீபத்திய அறிக்கையை 4 வாரத்தில் சமர்ப்பிக்க வேண்டும்,’ என உத்தரவிட்டு விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.

Related Stories: