காவல்துறை-வழக்கறிஞர் மோதல் எதிரொலி: கிரண்பேடியை மீண்டும் ஆணையாளராக வேண்டும்...கோஷம் எழுப்பி டெல்லி போலீசார் போராட்டம்

டெல்லி: டெல்லி திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வாகனம் நிறுத்துவது தொடர்பாக காவல்துறையினருக்கும் வழக்கறிஞர்களுக்கும் அண்மையில் கடுமையான மோதல் வெடித்தது. மிகப்பெரிய கலவரமாக மூண்ட இச்சம்பவத்தில் இரு  தரப்பினரும் தாக்கிக்கொண்டனர். இதில், 20-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. அதேபோல, 10-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களும் காயமடைந்ததாக கூறப்படுகிறது. காயம்பட்ட வழக்கறிஞர்களும்  காவல்துறையினரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் குறித்து டெல்லி உயர்நீதிமன்றம் நீதிமன்ற விசாரணைக்கு உத்தரவிட்டது. டெல்லி உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி  எஸ்.பி. கார்க் நடத்தும் விசாரணை ஆறு வாரங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. வழக்கறிஞர்களுக்கும், காவல்துறையினருக்கும் மோதல் வெடித்ததைத் தொடர்ந்து வழக்கறிஞர்கள்  பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்துக்கு வெளியே வழக்கறிஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தநிலையில், டெல்லி தீஸ் ஹசாரி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற மோதலைக் கண்டித்து டெல்லி காவல்துறையினர் இன்று திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட காவலர்கள், ‘கிரண்பேடியை மீண்டும்  காவல்துறை ஆணையாளராக கொண்டு வர வேண்டும் என்று கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காவலர்களின் போராட்டத்தையடுத்து, டெல்லி காவல் ஆணையாளர் அமுல்யா பட்நாயக், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு முன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது அவர், ‘இது நமக்கான சோதனை நேரம். நாம்  பொறுமையாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். நீதித்துறையின் மீது நம்பிக்கை இருக்கிறது. இதுதொடர்பாக சட்டப்பூர்வமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தார். இருப்பினும், காவல்துறையினரின் தொடர்ந்து  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: