கோவில்பட்டி, விளாத்திகுளம், புதூரில் அமெரிக்கன் படைப்புழுக்களால் சோளம், கம்பு பயிர்கள் பாதிப்பு

கோவில்பட்டி: கோவில்பட்டி,  விளாத்திகுளம், புதூர் பகுதிகளில் வெள்ளை சோளம், கம்பு  பயிர்களில் அமெரிக்கன் படைப்புழுக்கள் தாக்கியுள்ளன. இதனால் விவசாயிகள் கவலையடைந்த உள்ளனர். கோவில்பட்டி,  விளாத்திகுளம், கயத்தாறு, ஓட்டப்பிடாரம், எட்டயபுரம் வட்டார கிராம மானாவாரி  விவசாயிகள், கடந்தாண்டு பிற பயிர்களை விட பெருமளவில்  மக்காச்சோளம் சாகுபடி செய்தனர். ஆனால் மக்காச்சோளம் பயிர்களில்  அமெரிக்கன் படைப்புழு தாக்குதல் அதிகளவில் ஏற்பட்டதால், விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். இந்நிலையில் இவ்வட்டார விவசாயிகள், வழக்கம்போல் நடப்பாண்டில் கடந்த புரட்டாசி  மாத ராபி பருவத்தில் உளுந்து, பாசிப்பயறு,  வெங்காயம், மிளகாய், பருத்தி, கொத்தமல்லி, சூரியகாந்தி, கம்பு, வெள்ளை  சோளம் போன்ற பயிர்களை பயிரிட்டுள்ளனர்.

கடந்தாண்டு  படைப்புழு தாக்குதலால் மக்காச்சோளம் பயிர்கள் பாதிக்கப்பட்டதால், வேளாண்மைத்துறை அதிகாரிகள், இந்தாண்டில் மக்காச்சோளம் பயிர் சாகுபடியை  தவிர்குமாறு அறிவுறுத்தினர். இதனால் 30 சதவீதம் வரை மட்டுமே மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இதனிடையே வெள்ளை சோ ளம், கம்பு பயிர்களிலும் அமெரிக்கன் படைப்புழு  தாக்குதல் ஏற்பட்டு உள்ளது. இதனால் இவற்றை பயிரிட்ட விவசாயிகள்  கவலை அடைந்துள்ளனர். தகவலறிந்த வேளாண்மைத்துறை அதிகாரிகள் கோவில்பட்டி, புதூர், விளாத்திகுளம் வட்டாரங்களில்  வெள்ளை சோளம், கம்பு பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களை  பார்வையிட்டு வருகின்றனர். கடந்தாண்டு படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு எக்டேருக்கு ரூ.7010 அரசு நிவாரணமாக வழங்கப்பட்டது. அதேபோல் உரிய கணக்கெடுப்பு நடத்தி படைப்புழு தாக்குதலால் பாதிக்கப்பட்ட வெள்ளை சோளம், கம்பு பயிர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தி இருக்கின்றனர்.

Related Stories: