நாட்டில் இயல்பு நிலையை மீட்டெடுக்குமாறு பிரதமர் அதில் அப்துல் மஹ்தி போராட்டக்காரர்களுக்கு அழைப்பு

ஈராக்: போராட்டங்களைக் கைவிட்டு நாடு முழுவதும் இயல்பு நிலையை மீட்டெடுக்குமாறு ஈராக் பிரதமர் அப்துல் மஹ்தி அழைப்பு விடுத்துள்ளார். ஈராக்கில் ஊழல், வேலையின்மை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பிரதமர் அதில் அப்துல் மஹ்திக்கு எதிராக 3 வாரங்களுக்கும் மேலாகப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஈராக்கில் அக்டோபர் மாதம் தொடங்கிய இப்போராட்டத்தில் தற்போது வரை 250 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 2,000க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து ஈராக்கில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.

மேலும் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் போராட்டம் தீவிர நிலையை அடைந்துள்ளது. சாலை மறியல் போன்ற செயல்களில் போராட்டக்காரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். மேலும் புனித நகரமான கர்பலாவில் ஈரானியத் தூதரகம் மீது போராட்டக்காரர்கள் நடத்திய தாக்குதலில் 3 பேர் பலியாகினர். தொடர் வன்முறை காரணமாக ஈராக்கில் பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாட்டில் இயல்பு நிலையை மீட்டெடுக்குமாறு பிரதமர் அதில் அப்துல் மஹ்தி போராட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து ஈராக் பிரதமர் அப்துல் மஹ்தி கூறும்போது, போராட்டக்காரர்கள் நாட்டின் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தைப் பாதிக்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும். சாலை மறியல் போன்றவை மிகப்பெரிய பொருளாதார இழப்பை அரசுக்கு ஏற்படுத்தும் என கூறியுள்ளார்.

Related Stories: