கர்நாடக மாநில ரசாயன கழிவால் மேட்டூர் நீர்த்தேக்கப்பகுதியில் பச்சை நிறமாக மாறிய தண்ணீர்: துர்நாற்றத்தால் கிராமத்தை காலி செய்ய மக்கள் முடிவு

மேட்டூர்: மேட்டூர் நீர்தேக்கம் 60 சதுர மைல் பரப்பளவு கொண்டது. ஒகேனக்கல் முதல் மேட்டூர் வரை காவிரியின் இரு கரைகளிலும் ஏராளமான கிராமங்கள் உள்ளன. காவிரியின் இரு கரைகளிலும் மீனவர்கள் முகாம் அமைத்து மீன்பிடி  தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் குடிநீருக்காகவும், பிற உபயோகங்களுக்கும் காவிரி நீரை நேரடியாக பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், மேட்டூர் நீர்தேக்கம் பச்சை நிறமாக மாறியதுடன், நீர் கடும் துர்நாற்றம் வீசுகிறது. பண்ணவாடி பரிசல்துறை, கோட்டையூர் பரிசல்துறை மற்றும் தர்மபுரி மாவட்டத்தின் கரைகளிலும், நீர் பச்சை நிறமாக மாறி காணப்படுகிறது.  படகில் காவிரியை கடந்து செல்பவர்கள், நீரில் சிறிது தூரம் நடந்து சென்று, பிறகு தான் பரிசல் அல்லது படகில் ஏறவேண்டும். அவர்கள் நீரில் நடந்து செல்லும் போது கால்களிலும் ஆடைகளிலும், நீரில் உள்ள பச்சைநிற கழிவுகள் படர்வதுடன்,  உடலில் அரிப்பும் ஏற்படுகிறது.

பண்ணவாடி பரிசல்துறை பகுதியில், ரசாயன கலவை போல தேங்கிய கழிவால், 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பண்ணவாடியிலும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் உடல் உபாதைகள், கண் எரிச்சல் ஏற்படுவதாக கிராம மக்களும்,  மீனவர்களும் கூறுகின்றனர். சமைத்த உணவுகளை சாப்பிட முடியாத அளவிற்கு நீரில் துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக தங்களுக்கு நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக காவிரி கரையில் வசிக்கும் மக்கள் கூறுகின்றனர்.குறிப்பாக, கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் ஏராளமான இடங்களில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே, நீர்மாதிரியை சேகரித்து இது ரசாயன கழிவா என அறிந்து, தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவிரி கரையோர கிராம  மக்கள் வலியுறுத்துகின்றனர். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், கிராமத்தை காலி செய்து விட்டு, வேறு பகுதிகளில் குடியேற காவிரி கரையோர மக்கள் முடிவு செய்துள்ளனர்.கர்நாடக மாநிலத்தில் இருந்து அதிகளவில் உபரிநீர் திறக்கப்படும் போது எல்லாம், தொழிற்சாலை ரசாயன கழிவுநீர் கலந்து வருவதாகவும்,   துர்நாற்றம் வீசும் போதெல்லாம் பொதுப்பணித்துறையும், மாசு கட்டுப்பாட்டு  வாரியமும்,  அப்பகுதியில் நீர் மாதிரிகளை  எடுத்துச்செல்வதோடு சரி. எனவே இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக மாநிலம் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை காரணமாக,  மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சற்று அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 9 ஆயிரம் கன அடியாக இருந்த நீர்வரத்து,நேற்று காலை விநாடிக்கு 9,500 கனஅடியாக அதிகரித்தது.  அணை முழுமையாக நிரம்பியுள்ளதால், அணையில் இருந்து நீர் மின்நிலையம் வழியாக 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் டெல்டா பாசனத்திற்கு வெளியேற்றப்பட்டு வருகிறது. கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 400 கன அடி நீர்  திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.

Related Stories: