முறைகேடுகள் நடப்பதை தடுக்க பல்கலை தேர்வு மையங்களில் ஜாமர் கருவி பொருத்துங்கள்: துணைவேந்தர்களுக்கு யுஜிசி கடிதம்

புதுடெல்லி:  பல்கலைக்கழகங்கள் மற்றும் மேல்நிலை கல்வி நிறுவனங்களின் தேர்வு மையங்களில் ஜாமர் கருவிகளை பொருத்த வேண்டும் என பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களுக்கு பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) கடிதம் எழுதியுள்ளது.

பல்கலைக்கழக தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதை தவிர்க்கும் வகையில் தேர்வு மையங்கில் ஜாமர் கருவிகளை பொருத்தும்படி கடந்த 2016ம் ஆண்டு பல்கலைக்கழக மானிய குழு பரிந்துரை செய்திருந்தது. இந்நிலையில் பல்கலைக்கழகங்கள் அரசின் கொள்கைகளுடன் ஒத்துபோகும்படியும் ஜாமர் கருவிகளை தேர்வு மையங்களில் நிறுவும்படியும் அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக மானிய குழு, பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மற்றும் கல்லூரி முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரிகள் ஜாமர் கருவிகள் பொருத்த வேண்டும் என்ற அரசின் கொள்கையை பின்பற்றுகிறீர்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும். வகுப்பறையில் பொருத்தக்கூடிய ஈசிசிஆர்ஜே6பி5 வகையை சேர்ந்த ஜாமர் கருவியின் மாதிரியானது ஆய்வு மற்றும் களசோதனைகள் மூலமாக வெற்றிகரமாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

அடிப்படை டிரான்ஸீவர் நிலையம் இல்லாத இடங்களில் ஜாமர் கருவிகளை பயன்படுத்த வேண்டும். தேர்வுகள் தொடங்குவதற்கு முன்பாக தேர்வு மையங்களில் முறைகேடுகளை தவிர்க்கும் வகையில் ஜாமர் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளது என்பது உறுதி செய்யப்பட ேவண்டும். மேலும் அவற்றின் பிடிஎஸ் சிக்னல் வலிமை, பிடிஎஸ்சில் இருந்து ஜாமர் எவ்வளவு தொலைவில் அமைக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விவரங்களை சோதனை செய்ய வேண்டும். அரசின் ஜாமர் கொள்கைகளுக்கு உட்பட்டு ஜாமர் கருவிகளை பயன்படுத்துவதற்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும். அரசின் நிறுவனங்களான இந்திய எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட், பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களில் மட்டுமே, தேர்வு மையங்களில் பொருத்துவதற்கான குறைந்த சக்தி கொண்ட ஜாமர் கருவிகளை கொள்முதல் செய்ய வேண்டும். ஒப்பந்த புள்ளி அல்லது அரசு அங்கீகரிக்காத நிறுவனங்களில் இருந்து ஜாமர்களை கொள்முதல் செய்வது அரசின் விதிமுறைக்கு எதிரானதாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. பல்கலைக்கழக தேர்வுகளில் முறைகேடுகள் நடப்பதை தவிர்க்க தேர்வு மையங்களில் ஜாமர் கருவிகளை 100 மீட்டர் சுற்றளவுக்குள் தகவல் தொடர்புகளை பிளாக் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளும்படி பல்கலைக்கழகங்களுக்கு, பல்கலைக்கழக மானியக்குழு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

Related Stories: