தேவகோட்டையில் சாக்கடையில் வசிக்கும் குடிசை வாசிகள்: தொற்றுநோய் பரவும் அபாயம்

தேவகோட்டை:தேவகோட்டை பழைய சருகணி ரோடு சிங்கமுக காளியம்மன் கோவில், இம்ரான் நகர், கபர்ஸ்தான் பகுதிகளில் வறுமைக் கோட்டிற்கு கீழ உள்ள மக்களும் அரசால் இலவச மனையிடம் வழங்கப்பட்டு வசிக்கும் மக்களும் வசிக்கின்றனர். சாலையில் இருந்து தாழ்வான பகுதியாக இருப்பதால் சிறு மழை பெய்தாலும் தண்ணீர் வீடுகளைச் சுற்றி தெப்பக்குளம்போல் காட்சி அளிக்கிறது. தேங்கும் தண்ணீர் வெளியேற வடிகால் வசதி இல்லாத காரணத்தால் ஒரு வாரத்திற்கும் மேலாக தேங்கிய தண்ணீர் சாக்கடைபோல் மாறி இருக்கிறது. அவரவர் வீட்டிற்கு நுழையக்கூட முடியவில்லை. கபர்ஸ்தான் எதிரே உள்ள வீதி முழுவதுமே அடைபட்டு காட்சி அளிக்கிறது.

நகராட்சி நிர்வாகம் இப்பகுதியை சரி செய்ய வடிகால் வசதியும் சாலை வசதியும் ஏற்படுத்தினால் மட்டுமே தீர்வு கிடைக்கும். குடிசைவாசி மக்கள் பிரச்னைகளை யாரிடம் கொண்டு செல்வது இதற்கு தீர்வு காண்பது எப்படி என்று கூட அறிந்திடாமல் இருக்கின்றனர். இதுகுறித்து முகமதுஷேக்அப்துல்லா கூறுகையில், ‘எங்கள் பகுதி மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி சிரமப்படுகின்றனர். மழை பெய்த தண்ணீர் குளமாக காட்சி அளிக்கிறது. இதில் குடிதண்ணீர் கலங்கலாக வருவதைத்தான் மக்கள் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. எங்களுக்கு நல்ல வழியை ஏற்படுத்த அரசு முன் வரவேண்டும்’ என்றார்.

ஷேக் அப்துல்லா கூறுகையில், ‘சிங்கமுக காளிஅம்மன் கோவில் பின்புறம் இந்த வீதியைப் பாருங்கள். சாக்டைக்குளமாக காட்சி அளிக்கிறது. நான் பலமுறை கலெக்டரிடம் மனு கொடுத்திருக்கிறேன். கொசுத்தொல்லை விஷ ஐந்துக்கள் தொல்லை தொற்றுநோயால் அவதி என மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். நாங்கள் தீவில் வசிப்பது போல் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். எங்களுக்கு தீர்வு கிடைக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: