நாகை அருகே குடிநீர் பிரச்னையை தீர்க்கக்கோரி செல்போன் டவரில் ஏறி நின்று மதிமுக தொண்டர் தற்கொலை மிரட்டல்

கீழ்வேளூர். குடிநீர் பிரச்னையை தீர்க்க கோரி செல்போன் டவரில் ஏறி மதிமுக தொண்டர் தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் நாகை அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த  வண்டலூர் சிவன்கோயில் தெருவை சேர்ந்த நாகப்பன் மகன் திலகர் (33). ம.தி.மு.க. தொண்டர் அணியை சேர்ந்த இவர், நேற்று காலை 6.30 மணியளவில் வண்டலூரில் உள்ள 130  அடி உயரமுள்ள தனியார் செல்போன் டவரில் சுமார் 50 அடி உயரத்திற்கு ஏறி நின்று உள்ளூர் பிரச்சனை பற்றிய கோரிக்கை குறித்து  கோஷம் எழுப்பினார்.  அப்போது  திலகர் கையால் எழுதப்பட்ட கோரிக்கை மனுவின் நகல்களை கீழே வீசினார். அதில்  மேல்நிலை நீர் தேக்க தொட்டி  பராமரிப்பு இல்லாமல் உள்ளதை பராமரித்து குடிநீர் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகள் இடம் பெற்றிருந்ததது.

தகவல் அறிந்த வேளாங்கண்ணி தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர், போலீசார் சென்று திலகரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வண்டலூர் கிராமத்தை கலெக்டர் பிரவின்நாயர் வந்து பார்த்தால்தான்  இறங்குவேன் என்றார். மேலும் யாராவது மேலே ஏறி என்னை பிடிக்க முயன்றால் கீழே விழுந்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்தார். இதையடுத்து  காவல் துறையினரும், தீயணைப்பு துறையினரும்  மேல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து விட்டு டவரை சுற்றி நின்றனர். கீழ்வேளூர் வட்டாட்சியர் கபிலன், வட்டார வளர்ச்சி அலுவலர் திருமலைக்கண்ணன்  ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் பற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாகவும்,  கீழே இறங்கி வருமாறும்,  காவல்துறையினர் கைது செய்யமாட்டார்கள் என்று கூறினர்.

இதனை ஏற்றுக்கொண்ட திலகர், காலை 11.30 மணிக்கு செல்போன் டவரில் இருந்து கீழே இறங்கினார். அவரை  போலீசார் விசாரணைக்காக வேளாங்கண்ணி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனால் சுமார் 5  மணி நேரம் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

Related Stories: