கஞ்சா போதை இளைஞர்களால் கொள்ளிடம் ஆற்றில் வீசப்பட்ட மாணவர் 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு

திருச்சி: திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே கஞ்சா போதை இளைஞர்களால் கொள்ளிடம் ஆற்றில் தூக்கி வீசப்பட்ட பொறியியல் மாணவர் ஜீவித் 3வது நாளில் சடலமாக மீட்கப்பட்டார். துறையுறை சேர்ந்த ஜீவித் கடந்த 30ம் தேதி அன்று டோல்கேட் கொள்ளிடம் ஆற்று பாலத்தின் கீழ் தனது காதலியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மது அருந்திக் கொண்டும், கஞ்சா புகைத்துக் கொண்டும் இருந்த 5 பேர் கொண்ட கும்பல் காதல் ஜோடியை மிரட்டியுள்ளது. மேலும் அந்த கும்பல் தன் காதலியிடம் தவறாக நடக்க முயன்றதால், அவரை அங்கிருந்து ஓடி விடும்படி காதலன் ஜீவித் கூறியுள்ளார். இதையடுத்து அந்த இளம்பெண் அங்கிருந்து தப்பி ஓடி இருக்கிறார்.

இதனால் ஆவேசத்தில் இருந்த கஞ்சா போதை கும்பல், ஜீவித்தை கடுமையாக அடித்து உதைத்து கொள்ளிடம் ஆற்று தண்ணீரில் தூக்கி வீசியுள்ளது. தப்பியோடிய காதலி அளித்த தகவலின் பேரில் வந்த போலீசார் கஞ்சா போதை கும்பலை சேர்ந்த இருவரை கைது செய்ததுடன், தண்ணீரில் மூழ்கிய ஜீவித்தை தேடும் பணியில் தீயணைப்பு படையுடன் இணைந்து ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து ஸ்ரீரங்கம், திருச்சி, நவல்பட்டு ஆகிய மூன்று தீயணைப்பு படையினர் தீவிரமாக தேடி வந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து சுமார் 8 கிலோ.மீட்டர் தொலைவில் உள்ள பனையபுரம் அருகே திருபால்துறை கொள்ளிடம் ஆற்றில் மாணவர் ஜீவித் உடல் சடலமாக மீட்கப்பட்டது.

Related Stories: