சோலார் பேனல் மோசடி வழக்கு: நடிகை சரிதா நாயருக்கு 3 ஆண்டுகள் சிறை

கோவை: சோலார் பேனல் மோசடி வழக்கில் கேரள நடிகை சரிதா நாயர் உள்ளிட்டோருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது. கோவை வடவள்ளியில், சோலார் பேனல் நிறுவனம் நடத்தி ரூ.31 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக கேரள நடிகை சரிதா நாயர் (45), அவரது முன்னாள் கணவர் பிஜூ ராதாகிருஷ்ணன் (55), மேலாளர் ரவி (42) ஆகியோரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2009ல் கைது செய்தனர். இந்த வழக்கு கோவை ஜே.எம் 6 நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் நேற்று காலை மாஜிஸ்திரேட்டு கண்ணன் முன்னிலையில் விசாரணை நடந்தது. இதற்காக சரிதாநாயர், பிஜூ ராதாகிருஷ்ணன், ரவி ஆகியோர் ஆஜராகினர்.

விசாரணையின் போது 3 பேரும் குற்றவாளிகள் என மாஜிஸ்திரட்டு தீர்ப்பளித்தார். தண்டனை விபரத்தை மாலையில் அறிவிப்பதாக ஒத்திவைத்தார்.

இதையடுத்து, மாலை மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது 3 பேருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து 3 பேரும் வழக்கில் மேல் முறையீடு செய்ய கால அவகாசம் கேட்டு மனு கொடுத்தனர். இதையடுத்து நவம்பர் 14ம் தேதி வரை 3 பேருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டது.

Related Stories: