மக்கள் பாதிப்பதை பார்த்து சும்மா இருக்க மாட்டோம்: பணிக்கு திரும்பாவிட்டால் புதியவர்களை நியமிப்போம்: ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ள டாக்டர்களுக்கு முதல்வர் எச்சரிக்கை

ஓமலூர்: அரசு டாக்டர்கள் போராட்டத்தால் மக்கள் பாதிக்கப்படுவதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். உடனடியாக அவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் புதிய மருத்துவர்களை நியமிப்போம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் ஓமலூரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அளித்த ேபட்டி: திருச்சி மாவட்டம் மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் ஆள்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்தை உயிருடன் மீட்க, அரசு உச்சக்கட்ட முயற்சிகள் அனைத்ைதயும் மேற்கொண்டது.  சிறுவனின் சடலத்தை காட்டவில்லை என்று கூறி, தேவையில்லாத பிரச்னையை உருவாக்குகின்றனர். விடிய, விடிய ஊடகங்கள் அந்த இடத்தில்தான் இருந்தது.

பெற்றோரும் உடனிருந்தே உடல் அடக்கம் செய்யப்பட்டது. எனவே இது போன்ற சர்ச்சைகளை ஊடகங்கள் கிளப்பாமல், எதிர் காலத்தில் இது போன்ற துயரங்கள் நடக்காத வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி அரசுக்கு துணை நிற்க வேண்டும். தற்போது அங்கீகரிக்கப்படாத மருத்துவ சங்கத்தினரே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.  தேர்ந்தெடுக்கப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களுடன் நானும், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரும் கடந்த 21ம் தேதி, இரவு 2மணிநேரம் தலைமை செயலகத்தில் பேசி, உடன்பாடு ஏற்பட்டு விட்டது. ஆனால் அங்கீகாரம் இல்லாத சங்கத்தினர் தேவையில்லாத பிரச்னையை உருவாக்க வேலை நிறுத்தம் செய்கின்றனர். அரசு மருத்துவக்கல்லூரியில் படித்து முடிக்க, ஒரு மாணவர் 67,500 மட்டுமே கட்டணம் செலுத்துகிறார். அவருக்கு மக்கள் வரிப்பணத்தில் இருந்து 1.24 கோடியை செலவிட்டு, அரசு படிக்க வைக்கிறது. வேறு எந்த படிப்புக்கும் இப்படி செலவிடுவதில்லை. இப்படி அரசு பணத்தில் படித்து சேவை மனப்பான்மையோடு பணியாற்ற வேண்டியவர்கள், பல கோரிக்கைகளையும் வைக்கின்றனர். அதையும் நிறைவேற்றுகிறோம்.

ஆனாலும் சிலர், இது ேபால் போராடுவது வேதனைக்குரியது. இவர்களின் போராட்டத்தால் பாதிக்கப்படுவது மக்கள்தான். எனவே அதை பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அறிவித்தது போல, உடனடியாக அவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், அவை காலிப்பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு, உரிய மருத்துவர்களை கொண்டு நிரப்பப்படும். எனவே மக்கள் நலனே முக்கியம் என்பதை உணர்ந்து அவர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும்.

ஒப்பந்த சாகுபடி சட்டத்தால் பாதிப்பு என்று உண்மையான விவசாயிகள் யாரும் கூறவில்லை. லெட்டர்பேடு சங்கங்களே கூறுகிறது. இந்த திட்டத்தில் வலுக்கட்டாயமாக விவசாயிகள் சேர வேண்டிய அவசியமும் இல்லை. அவர்கள் சாகுபடி செய்யும் பொருட்களுக்கு நஷ்டமில்லாத சீரான விலையை பெற்றுத்தருவதே இதன் நோக்கம். இவ்வாறு முதல்வர் கூறினார்.

Related Stories: