பாஜ பாதயாத்திரையில் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு

சென்னை:  சென்னையில் நடைபெற்ற பாஜ பாதயாத்திரையில் மத்திய நிதி  அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டார். தமிழக பாஜ சார்பில் மகாத்மா காந்தியின் 150வது ஆண்டு பிறந்த நாள் பாதயாத்திரை நிறைவு விழா, சர்தார் வல்லபாய் படேலின் 144வது ஆண்டு பிறந்த நாள் ஒற்றுமை நடைபயண விழா மற்றும் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்தது உள்ளிட்ட முப்பெரும் விழா பாத யாத்திரை சென்னையில் நேற்று நடைபெற்றது. சென்னை செனாய் நகர் புல்லா அவென்யூவில் இருந்து தொடங்கிய பாத யாத்திரை டி.பி.சத்திரம் வரை சென்றது. இந்த பாத யாத்திரைக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை வகித்து நடத்தி சென்றார். பூந்தமல்லி நெடுஞ்சாலை, லட்சுமி டாக்கீஸ் சாலை, கஜபதி ரோடு வழியாக சென்ற பாத யாத்திரையில் ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டனர்.

இந்த பாத யாத்திரையின் போது செனாய் நகர் 4வது குறுக்கு தெருவில் பாஜ  கொடியேற்றப்பட்டது. முன்னதாக, புல்லா அவென்யூ பகுதியில் வைக்கப்பட்டிருந்த காந்தியின் உருவபடத்துக்கு நிர்மலா சீதாராமன் மலர்தூவி மரியாதை செலுத்தினர். கஜபதி தெருவில் படேல் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பாஜ மகளிர் அணியினர் நிர்மலா சீதாராமனுக்கு பூரண கும்ப மரியாதை அளித்தனர். செனாய் நகரில் தொடங்கிய பாத யாத்திரை டி.பி.சத்திரம் பரமேஸ்வர் நகரில் சுமார் மூன்றரை கி.மீ தூரத்தை கடந்து நிறைவு பெற்றது. அங்கு மேடை அமைக்கப்பட்டு அதில் காந்தி, படேல் உருவ படங்கள் வைக்கப்பட்டிருந்தன. அங்கு தேங்கி இருந்தமழை நீரில் நிர்மலா சீதாராமன் நடந்தே சென்றார். அவருடன் வானதி சீனிவாசன், நடிகை கவுதமி, கே.டி.ராகவன் உள்ளிட்ட தமிழக பாஜ நிர்வாகிகளும் உடன் சென்றனர்.

Related Stories: