பருவமழை தொடங்கும் முன்பே வடிகால்களை சீரமைக்காததால் தாழ்வான பகுதியில் தேங்கும் மழைநீர்: நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியம்

அறந்தாங்கி: அறந்தாங்கி நகரில் பருவமழை தொடங்கும் முன்பே வடிகால் வாய்க்கால்களை நகராட்சி நிர்வாகம் சீரமைக்காததால், தற்போது தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அறந்தாங்கி நகரில் ஆண்டுதோறும் பருவமழை பெய்வதற்கு முன்பாகவே நகராட்சி நிர்வாகம் சார்பில், நகரில் உள்ள வடிகால் வாய்க்கால்களை பொக்லேன் இயந்திரம் மூலம் தூர்வாரி சீரமைப்பது வழக்கம். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அறந்தாங்கி நகரில் போதுமான மழை பெய்யாததால், நகராட்சி நிர்வாகம் இந்த ஆண்டு வடிகால்களை முறையாக தூர்வாரி சீரமைக்கவில்லை.

இந்த நிலையில் கடந்த வாரம் அறந்தாங்கியில் சுமார் 11 செ.மீ மழை பெய்தபோது, நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல தேங்கியது. இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். அந்த மழைக்கு பின்னரும் அறந்தாங்கி நகராட்சி நிர்வாகம் வடிகால்களை துhர்வாரவில்லை. இதனால் நேற்று அறந்தாங்கி நகரில் பெய்த பலத்த மழையின் காரணமாக அறந்தாங்கி பேருந்து நிலையம் பின்புறம், பேருந்து நிலையம், கள்ளுச்சந்து ரோடு, அண்ணாசிலை, மணிவிளான்தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல தேங்கியது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். அறந்தாங்கி நகரில் தேங்கியுள்ள மழை நீரை நகராட்சி நிர்வாகம் உடனடியாக வடிக்க நடவடிக்கை எடுப்பதோடு, மழைநீர் நகரில் உள்ள குளங்களில் சேகரமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: