திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது: லட்சக்கணக்கானோர் விரதம் துவங்கினர்

திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்தசஷ்டி திருவிழா நேற்று தொடங்கியது. அதிகாலையிலேயே பக்தர்கள் கடலில் புனித நீராடி முருகனை தரிசித்து விரதம் துவங்கினர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், நேற்று கந்தசஷ்டி திருவிழா தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 1 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 6 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலைக்கு எழுந்தருளினார். கோயில் 2ம் பிரகார மண்டபத்தில் மகாசங்கல்ப பூஜையை தொடர்ந்து யாகசாலை பூஜைகளை ஆனந்த விஸ்வநாத பட்டர் தொடங்கினார்.

பின்னர் யாகசாலையில் ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி உள் பிரகாரங்களில் வீரவாள் வகுப்பு, வேல் வகுப்பு பாடல்களுடன் சண்முகவிலாசம் சேர்ந்தார். அங்கு மகா தீபாராதனை நடைபெற்றது.  மாலை 5 மணிக்கு சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு தங்கத்தேரில் சுவாமி எழுந்தருளி கிரிபிரகாரம் வலம் வந்து கோயிலை வந்தடைந்தார். கந்தசஷ்டி விழா தொடங்கியதையடுத்து நேற்று அதிகாலை பக்தர்கள் ஏராளமானோர் கடலில் நீராடி கோயில் பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்தனர்.

இலங்கை, மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும், தமிழகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து விரதம் தொடங்கினர். லட்சக்கணக்கானோர் தங்கள் வீடுகளில் இருந்தபடியே விரதம் துவங்கினர். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரம்சம்ஹாரம் நவ.2ம் தேதி நடக்கிறது. அன்று மாலை கடற்கரையில் சூரனை முருகன் வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. தற்காலிக கூடாரங்கள்: கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்கி விரதமிருப்பதால், அவர்களின் வசதிக்காக நாழிக்கிணறு பஸ் நிலைய வளாகத்தில் தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

Related Stories: