தமிழக-கேரள எல்லையில் 5 டன் வெடிபொருட்கள் காய்கறி லாரியில் கடத்தல்: 3 பேர் கைது; போலீஸ் விசாரணை

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே காய்கறி லாரியில் மறைத்து கடத்த முயன்ற 5 டன் வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கூடலூரை அடுத்துள்ள கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வழிக்கடவு சோதனைச்சாவடியில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த கேரள மதுவிலக்கு பிரிவு போலீசார் மைசூரில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்குள் நுழைந்த கேரள மாநில பதிவு எண் கொண்ட லாரி ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.   டிரைவர் முன்னுக்குப்பின் முரணாக தகவல் அளித்ததால், சந்தேகம் அடைந்த போலீசார் காய்கறிகளை இறக்கி பரிசோதனை  செய்தனர். அப்போது காய்கறிகளுக்கு கீழே 4,375 கிலோ ஜெலட்டின் குச்சிகள், ஆயிரம் டெட்டர்னேட்டர்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்தனர்.

கர்நாடகா மாநிலம் குண்டல்பேட்டையிலிருந்து கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் பெரும்பாவூர் பகுதியில் உள்ள கல்குவாரிக்கு இவற்றை எடுத்துச் செல்வது தெரியவந்தது. உரிய ஆவணங்கள் இன்றி லாரியில் மறைத்து எடுத்து வரப்பட்டதால் லாரி டிரைவர் ஜினோதேவ் (30), லாரியில் பயணித்த சுனில் குமார் (50), ஜினோ (45) ஆகிய மூவரையும் கைது செய்தனர். கர்நாடக மாநிலம் குண்டல்பேட்டையில் இருந்து வந்த லாரி தமிழக பகுதி கக்காநல்லா, தொரப்பள்ளி, நாடுகாணி ஆகிய மூன்று இடங்களில் உள்ள வனத்துறை, காவல்துறை மற்றும் போக்குவரத்து துறை சோதனைச்சாவடிகடின தாண்டி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. வெடிபொருட்களுடன் சென்ற இந்த லாரியில் சோதனை நடத்தப்படாதது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வெடிபொருட்கள் வனப்பகுதியில் மறைந்துள்ள மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்துவற்காக கடத்தப்பட்டிருக்கலாமா, அல்லது தீவிரவாத கும்பலுக்காக கடத்தப்பட்டிருக்கலாமா என்ற சந்தேகத்தின் பேரிலும் கேரள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: