முதல் டி20 போட்டியில் இன்று ஆஸ்திரேலியா-இலங்கை மோதல்: உலக கோப்பைக்கு ஒத்திகை

அடிலெய்டு: ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டி20 போட்டி, அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் ஐசிசி உலக கோப்பை டி20 போட்டித் தொடர் நடைபெற உள்ளதால், அந்த தொடருக்கான ஒத்திகையாகவே இந்த 3 போட்டிகளும் அமையும். பந்தை சேதப்படுத்த முயன்றதாக சர்ச்சையில் சிக்கியதால் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் இருவரும் ஏற்கனவே டெஸ்ட், ஒருநாள் போட்டிகளுக்குத் திரும்பிய நிலையில் தற்போது டி20 போட்டிக்கான தேசிய அணியிலும் இடம் பிடித்துள்ளனர். இதனால் ஆஸி. அணியின் பேட்டிங் வரிசை மேலும் வலுவடைந்துள்ளது.

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலியா அணிக்கு சொந்த மண்ணில் விளையாடுவதும், உள்ளூர் ரசிகர்களின் ஆதரவும் கூடுதல் சாதகமாக இருக்கும். அலெக்ஸ் கேரி, கிளென் மேக்ஸ்வெல், பென் மெக்டெர்மாட், ஆஷ்டன் டர்னர் ஆகியோரது அதிரடியை கட்டுப்படுத்துவதும் இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு பெரிய சவால் தான்.  கம்மின்ஸ், ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், ஸம்பா என்று ஆஸி. அணி பந்துவீச்சும் பலமாகவே அமைந்துள்ளது. அதே சமயம், லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை அணியும் வெற்றிக்காக வரிந்துகட்டுகிறது. கான்பெராவில் நடந்த பயிற்சி ஆட்டத்தில் இலங்கை லெவன் அணி, ஆஸி. பிரதமர் லெவன் அணியிடம் தோற்றாலும் கடைசி வரை கடுமையாகப் போராடியதால் இலங்கை வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளனர். ஆல் ரவுண்டர்கள் அதிகம் உள்ளதும் இலங்கை அணிக்கு புதிய தெம்பை கொடுத்துள்ளது. பலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

Related Stories: