சேலத்தில் முதல்வர் எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு டிடிவி.தினகரன் ரகசியத்தை விரைவில் வெளியிடுவேன் : பெங்களூரு புகழேந்தி பேட்டி

சேலம்: கர்நாடக மாநில அதிமுக செயலாளராக இருந்தவர் பெங்களூரு புகழேந்தி. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக மூன்றாக உடைந்ததால் சசிகலா அணியில் சேர்ந்தார். பின்னர், டி.டி.வி.தினகரன் அமமுகவை தொடங்கியபோது, முக்கிய நிர்வாகியாக இருந்து செயல்பட்டு வந்தார். அமமுக சார்பாக, ஓசூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதன்காரணமாக, தினகரனுக்கும், புகழேந்திக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. தினகரனுக்கு எதிராக புகழேந்தி போர்க்கொடி தூக்கியுள்ளார். இந்தநிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று சேலத்தில் உள்ள அவரது வீட்டில் புகழேந்தி திடீரென சந்தித்து பேசினார். முதல்வரை சந்தித்துவிட்டு வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

நான் அதிமுகவில் இணைய வரவில்லை. எனது மாமனார் வீடு சேலத்தில் இருக்கிறது. மாமனார் வீட்டிற்கு வந்திருந்தேன். அப்போது, 35 ஆண்டு கால நண்பரான முதல்வரை பார்த்துவிட்டு, தீபாவளி வாழ்த்துக்கள் மற்றும் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கான வாழ்த்துக்களை தெரிவிக்க வந்தேன்.

தினகரன் கதை முடிந்துவிட்டது. யாரும் அவருடன் இல்லை. நான் மட்டும்தான் இருந்தேன். நானும் இப்போது, வெளியே வந்துவிட்டேன். உள்ளாட்சி தேர்தல் வந்தால், அவரது கதை முடிந்துவிடும். அவரது மறுமுகத்தை யாரும் பார்க்கவில்லை. அது எனக்குத்தெரியும். அந்த ரகசியம் என் கையில் இருக்கிறது. விரைவில் வெளியிடுவேன். இவ்வாறு அவர் கூறினார். அவருடன் முன்னாள் அமைச்சர் சுப்பையாவும் வந்திருந்தார். புதிய எம்.எல்.ஏ.க்கள் வாழ்த்து: அண்மையில் நடந்து முடிந்த இடைத்தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன், நாங்குநேரி தொகுதியில் நாராயணன் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்கள் இருவரும் நேற்று முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Related Stories: