கர்தார்பூர் வழித்தட இயக்கம் இந்தியா - பாக் இடையே ஒப்பந்தம் கையெழுத்து

அமிர்தசரஸ்: வரலாற்று சிறப்பு மிக்க கர்தார்பூர் வழித்தடத்தை செயல்படுத்துவது குறித்து இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று ஒப்பந்தம் கையெழுத்தானது. பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள தேரா பாபா நானக்  குருத்வாராவையும், பாகிஸ்தானில் நரோவால் மாவட்டத்தில் ரவி நதிக்கரையில்  அமைந்துள்ள தர்பார் சாகிப் குருத்வாராவையும் இணைப்பதற்கான கர்தார்பூர்  வழித்தடத்தை அமைக்க, இந்தியா-பாகிஸ்தான் அரசுகள் கடந்தாண்டு நவம்பரில்  ஒப்புக் கொண்டன. அதன்படி, இந்த வழித்தடம் அமைக்கப்பட்டு பணிகள்  முடிக்கப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து வரும் 9ம் தேதி இதற்கான திறப்பு  விழா நடைபெற உள்ளது.

இதனை முன்னிட்டு கர்தார்பூர் வழித்தடம்  தொடர்பான ஒப்பந்தம் இந்தியா - பாகிஸ்தான் இடையே நேற்று கையெழுத்தானது. பாகிஸ்தான் - இந்தியா எல்லையான நரோவாலில் கர்தார்ப்பூர் எல்லையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த ஒப்பந்தத்தின்படி நரோவாலில் குருத்வாராவுக்கு பார்வையாளர்கள் வருவதற்கு அனுமதிக்கப்படுகின்றது. காலை குருத்வாரா வரும் பொதுமக்கள் மாலை அங்கிருந்து புறப்பட்டுவிட வேண்டும். நாள் ஒன்றுக்கு 5000 பேர் குருத்வாராவை பார்வையிடுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஒரு பார்வையாளர் சுமார் ₹1400 கட்டணமாக செலுத்த வேண்டும். இருநாட்டு அதிகாரிகளுக்கும் இடையே நடந்த 3 சுற்று பேச்சுவார்த்தைக்கு பின்னர் இந்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: