ஏமன் போரில் 5,000க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கலாம்: யுனிசெஃப் தகவல்

ஏமன்: ஏமனில் நடந்து வரும் உள்நாட்டுப் போருக்கு 5,000க்கும் அதிகமான குழந்தைகள் பலியாகி இருக்கலாம் என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது. இதுகுறித்து யுனிசெஃப் கூறும்போது, ஏமனில் நடக்கும் உள்நாட்டுப் போருக்கு 5,000 குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது காயமடைந்திருக்கலாம். மேலும் லட்சக்கணக்கான குழந்தைகள் தங்களது கல்வியைக் கைவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

ஏமனில் 20 லட்சத்துக்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதில் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் ஐந்து வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் யுனிசெஃப் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில் சன்னி பிரிவைச் சேர்ந்த அதிபர் மன்சூர் ஹைதிக்கும் ஷியா பிரிவைச் சேர்ந்த ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹைதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா செயல்படுகிறது. ஹவுத்தி கிளர்ச்சிப் படைக்கு ஈரான் ஆதரவு அளிக்கிறது.

சவுதி அரேபியா தொடர்ந்து ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் மீது குறிவைத்து ஏமனில் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானோ கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளித்து வருகிறது. ஏமன் அரசுடன் இணைந்து சவுதி நடத்தும் மனிதாபிமானமற்ற தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபை முன்னரே கண்டித்திருந்தது.

Related Stories: