நரக வேதனையில் பொது மக்கள்: குமரி முழுவதும் சிதைந்து போன சாலைகள்

நாகர்கோவில்: குமரி மாவட்டம் பரப்பளவில் சிறிய மாவட்டமாக இருந்தாலும் கூட, மக்கள் அடர்த்தி நிறைந்த மாவட்டமாகும். சாலை போக்குவரத்து மிகவும் பிரதானமாகும். கேரளாவையொட்டி உள்ளதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு செல்லும் கனரக வாகனங்கள் குமரி மாவட்டம் வழியாக தான் பயணிக்கின்றன. இதனால் நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை, நாகர்கோவில் - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலை எப்போதும் வாகன நெருக்கடியாகவே இருந்து வருகிறது. இது தவிர இந்த மாவட்டத்தில் கார்கள், பைக்குகள் எண்ணிக்கை அதிகமாகும். சென்னை, கோவை போன்ற பெரு மாநகரங்களுக்கு அடுத்தபடியாக குமரி மாவட்டத்தில் தான் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன. கடந்த 20 வருடங்களுக்கு முன் இருந்த வாகனங்களின் எண்ணிக்கையை விட இப்போது பல மடங்கு வாகனங்கள் இந்த மாவட்டத்தில் அதிகரித்துள்ளன. ஆனால் வாகனங்களின் எண்ணிக்கைக்கேற்ப சாலைகளின் விரிவாக்கம் என்பது இல்லை. இந்த பிரச்சினை ஒருபுறமிருக்க, தற்போதுள்ள சாலைகளும் மிக மோசமாக உள்ளன.  தேசிய நெடுஞ்சாலைகள் மட்டுமின்றி தமிழக அரசின் பராமரிப்பில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள நகர்ப்புற மற்றும் கிராமப்புற சாலைகளும் மோசமாக உள்ளன.

Advertising
Advertising

பல்லாங்குழிகள் போல் சாலை முழுவதும் குண்டும், குழியுமாகி உள்ளன. ஒவ்வொரு சாலையிலும் நீண்ட நெடிய பள்ளங்களால் வாகன  ஓட்டிகள் சிக்கி திணறி வருகிறார்கள். மோசமாக கிடக்கும் சாலைகளால், விபத்துக்களும் அதிகரித்துள்ளன. தற்போது பெய்த மழையில் இந்த பள்ளங்களில் குளம் போல் தண்ணீர் தேங்கி கிடக்கின்றன. மாவட்ட தலைநகரான நாகர்கோவிலில் 70 சதவீத சாலைகள் மிக மோசமாக உள்ளன. மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் அமைந்துள்ள பிரதான சாலையும் பல்லாங்குழி சாலையாக மாறி கிடக்கின்றன. அவ்வப்போது மண் நிரப்பி சாலையில் உள்ள பள்ளத்தை சமன்படுத்தினாலும், தூறல் மழைக்கே மீண்டும் பொதுமக்களை பதம் பார்க்கும் சாலையாக மாறி விடுகிறது. இதே போல் கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு செல்லும் மிக முக்கியமான சாலை, 7 இடங்களில் பெரிய அளவில் குண்டும், குழிகளும் உள்ளன. பள்ளத்தை பார்த்து கார், பைக்கில் வருபவர்கள் பிரேக் பிடிக்க, பின்னால் வருபவர்கள் வேகமாக வந்து மோதி விபத்துக்கள் உருவாகும் நிலை உள்ளது. இல்லையென்றால் தேங்கி உள்ள மழை நீர் தெரியாமல் பள்ளத்தில் பைக்குடன் விழுந்து படுகாயம் அடையும் நிலை உள்ளது. இது போன்ற சாலை நாகர்கோவில் மாநகர் முழுவதும் உள்ள பிரதான சாலைகள் மட்டுமின்றி மாநகராட்சிக்குட்பட்ட சாலைகளிலும் உள்ளன. சமீபத்தில் நடந்த கணக்கெடுப்பில் மாநகர சாலைகள் மட்டும் சுமார் 500 கி.மீ. சுற்றளவுக்கு சீரமைக்கப்பட வேண்டி உள்ளது.

இதே போல் மாவட்டத்தில் மார்த்தாண்டம், தக்கலை, களியக்காவிளை என தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் உயிர் பலி வாங்கும் களமாக மாறி உள்ளன. வாகன ஓட்டிகளின் ரத்தத்தை உறிஞ்சும் இந்த சாலைகளுக்கு விமோசனம் என்பதே இல்லாத நிலை உள்ளது. இது பற்றி மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் எதுவும் கண்டு கொள்ள வில்லை. பொதுவாக புதிய சாலைகள் போடப்படும் போது, அந்த சாலையில் பழுது ஏற்பட்டால், சாலைகளை பொறுத்து 3 ஆண்டுகள் வரை அதனை அமைத்தவர்களே பராமரிக்க வேண்டும். இதற்காக குத்தகைதார்களிடம் காப்புத் தொகை பிடிக்கப்படுவதும் வழக்கம். ஆனால் தற்போது, நகராட்சி சாலைகள் முதல் தேசிய நெடுஞ்சாைலகள் வரை  ஒரே ஆண்டில் 3 முறை சீரமைக்கப்படும் அவலம் கூட நடைபெறுகிறது. இன்னும் இரு மாதங்கள் மழை இருக்கும் என்ற நிலையில், மோசமாக கிடக்கும் சாலைகளால் விபத்துக்களும், உயிர்பலிகளும் அதிகரிக்கும் என்ற அபாயகரமான நிலை உள்ளது. உடனடியாக தீர்வு காணும் வகையில் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாதால், சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. எந்த நேரத்தில் எந்த பள்ளத்தில் பைக் விழுந்து விபத்து நிகழுமோ? என்ற அச்சத்துடன் பைக்கில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. வேகமாக செல்லும் வாகனங்களின் நிலையும் ஆபத்தாக உள்ளது. இதற்கு விமோசம் பிறக்கும் வகையில் சாலைகளை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை ஆகும்.

நீதிமன்ற சாலையும் தப்ப வில்லை

நாகர்கோவில் நீதிமன்றம் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தையொட்டி வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த வேகத்தடையையொட்டி உள்ள பள்ளத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் விழுந்து எழுந்திருக்கும் நிலை உள்ளது. பஸ், கார் உள்ளிட்ட வாகனங்களும் சிக்கி திணறுகின்றன.  சாலைகளில் உள்ள பள்ளத்தால், பைக்கில் செல்பவர்களுக்கு முதுகுவலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் வருகின்றன. கழுத்து, முதுகு நரம்புகளும் பாதிக்கப்படும் நிலை உள்ளதாக பொதுமக்கள் கூறி உள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு எப்போது?

குமரி மாவட்டத்தில் நடைபெறும் நான்கு வழிச்சாலைக்கான  நிதியும் நிறுத்தப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நான்கு வழிச்சாலை பணிகளும் மந்த கதியில் தான் நடக்கின்றன. இந்த நிலையில், தற்போது மோசமாக கிடக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் சீரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு இல்லை. எனவே தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. நிலைைமயை சமாளிக்க மாவட்ட நிதியில் இருந்து பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக அதிகாரிகள் கூறினர்.

சாலை சீரமைப்புக்கு ரூ20 கோடி

நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கூறுகையில், குமரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளை சீரமைக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இரணியல் - முட்டம் சாலை 98 லட்சம், சாந்தபுரம் ரோடு ரூ. 120 லட்சம், வட்டக்கோட்டை - ெகாட்டாரம் - அகஸ்தீஸ்வரம் சாலை ரூ.166 லட்சம், இரவிபுதூர் கடை - கருங்கல் ரோடு ரூ.120 லட்சம், கடையல் - பேச்சிப்பாறை சாலை ரூ.101 லட்சம், வெள்ளிச்சந்தை - திருநயினார்குறிச்சி சாலை ரூ.168 லட்சம், அருமனை - ஆற்றூர் ரோடு ரூ. 109 லட்சம், மாங்கோடு - கணபதியான்கடவு சாலை ரூ.85 லட்சம் உள்பட பல்வேறு சாலைகள் இந்த திட்டத்தின் கீழ் சீரமைக்கப்பட உள்ளன. இந்த பணிக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. மார்த்தாண்டம், காளைசந்தை ரோட்டில் உடைந்து கிடக்கும் கான்கிரீட்டும் சீரமைக்கப்பட உள்ளது.  டிசம்பர் மாதம் வரை மழை இருக்கும். எனவே சாலை பணி தள்ளி போகிறது.

மே மாதத்துக்குள் மாநகர சாலைகள் முடிவடையும்

நாகர்கோவில் மாநகரில் 500 கி.மீ. சாலைகள் மோசமாக உள்ளன. இதை சீரமைக்க வேண்டுமென்றால் முதலில் புத்தன் அணை குடிநீர் குழாய் பதிப்பு பணிகள் முடிவடைய வேண்டும். வருகிற மே மாதத்துக்குள் இந்த பணிகள் முடிவடைந்து சாலை சீரமைக்கப்பட வாய்ப்பு உள்ளது. அதுவரை உள்ளூர் சாலைகள் சீரமைக்கப்பட வாய்ப்பு இல்லை என்று அதிகாரிகள் கூறினர்.

Related Stories: