ரூ.10ஆயிரம் நன்கொடை வழங்கினால் திருப்பதி கோயிலில் விஐபி தரிசனம்: தேவஸ்தான அதிகாரி தகவல்

திருமலை: 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கினால் விஐபி தரிசனம் செய்யலாம் என்று அதிகாரி தெரிவித்துள்ளார். திருப்பதி திருமலை தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலர் தர்மா ரெட்டி கூறியதாவது:நாடு முழுவதும் வெங்கடேஸ்வர  சுவாமி கோயில் கட்டி, தூபதீப நைவேத்தியம், அர்ச்சகர்களுக்கு நிதியுதவி, கோயில் புனரமைப்பு, இந்து தர்ம பிரச்சாரத்திற்காக  வாணி அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளைக்கு ஒரு ரூபாய் முதல் எவ்வளவு  வேண்டுமானாலும் பக்தர்கள் நன்கொடை வழங்கலாம். அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களை ஊக்குவிக்கும் விதமாக ரூ.10 ஆயிரம் நன்கொடை வழங்கினால் அவர்களுக்கு ஒரு விஐபி தரிசன டிக்கெட் வழங்கப்படும். ரூ.500  மதிப்புள்ள இந்த விஐபி டிக்கெட்டில் காலையில் நடக்கும் விஐபி வரிசையில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யலாம். இதற்கு சிபாரிசு கடிதங்கள் தேவையில்லை.

Advertising
Advertising

இதுபோல் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.99 ஆயிரம் வரை நன்கொடை வழங்கி 9 டிக்கெட்கள் பெறலாம். பின்னர் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை, ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை, ரூ.10 லட்சத்திற்கும் மேல் நன்கொடை வழங்கும்  பக்தர்களுக்கு ஏற்கனவே உள்ள அறக்கட்டளைகளுக்கு நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் முன்னுரிமை அடிப்படையில் தரிசனம் செய்து வைக்கப்படுவார்கள். ஏழுமலையான் கோயிலில் ரூ.1 லட்சத்திற்கு உட்பட்டு  நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு இதுவரை எவ்வித முன்னுரிமையும் வழங்கவில்லை. தற்போது முதன் முறையாக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

ரூ.10 ஆயிரம் நன்கொடையை திருமலையில் பக்தர்கள் பணமாகவும், டெபிட்கார்டிலும் செலுத்தி விஐபி தரிசன டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். விரைவில் ஆன்லைன் மூலமாகவும் வாணி அறக்கட்டளைக்கு நன்கொடை செலுத்தி விஐபி  டிக்கெட் பெறும் விதமாக செய்யப்படும்.இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories: