வடகிழக்கு பருவமழை காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கோவை: கனமழை காரணமாக கோவை, நீலகிரி, ஈரோடு மாவட்டங்களில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக நொய்யல் ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கோவை, குமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதிதீவிர கனமழை பெய்யும் என நேற்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து, இன்று தமிழகத்தின் தென் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோவையில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் தொடர் மழை காரணமாக நேற்று பள்ளி, கல்லுரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இதனிடையே, கோவை மாவட்டத்தில் மேற்குத்தொடர்ச்சி மழை அடிவார பகுதிகள் மற்றும் நொய்யல் ஆற்றின் நீர்பிடிப்புப்பகுதிகளில் தொடர்ந்து பெய்த கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளபெருக்கு தொடர்ந்து அதிகரித்த வண்ணமாக காணப்படுகிறது. தற்போது சுமார் 4,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதன் காரணமாக நொய்யல் ஆற்றை ஒட்டியுள்ள கரையோர பகுதி மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில், நொய்யல் ஆற்றின் கரையோர பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து, ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை முழுகொள்ளளவை எட்டியுள்ளநிலையில், அணையிலிருந்து வினாடிக்கு 12,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

கொடிவேரி அணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அணைக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பவானி கரையோரத்தில் உள்ள பங்காள புதூர், நஞ்சை புளியம்பட்டி, பள்ளிப்பட்டி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, நீலகிரி மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மழை ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடும் மேகமூட்டம் காரணமாக குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் உதகை நோக்கி சென்ற அரசு பேருந்து ஒன்று காட்டேரி அருகே 30 அடி பள்ளத்தில் சரிந்தது. இதில் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

Related Stories: