தேசிய மீன்பிடி சட்ட மசோதா வாபஸ் கோரி தூத்துக்குடி கலெக்டர் ஆபீசில் நாட்டுப்படகு மீனவர்கள் முற்றுகை

தூத்துக்குடி: மத்திய அரசின் புதிய தேசிய கடல் மீன்பிடி சட்ட மசோதாவை வாபஸ் பெறக்கோரி தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தை நாட்டுப்படகு மீனவர்கள் முற்றுகையிட்டனர். தூத்துக்குடி  மாவட்ட நாட்டுப்படகு, பைபர் மற்றும் கட்டுமர மீனவர் சமுதாய நலச்சங்கத்  தலைவர் கயஸ்  தலைமையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த  30க்கும் மேற்பட்ட கடலோர மீனவ கிராம மக்கள் தூத்துக்குடி  கலெக்டர்  அலுவலகத்திற்கு நேற்று காலை திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள், மத்திய அரசின் புதிய தேசிய கடல் மீன்பிடி சட்ட மசோதாவை வாபஸ் பெற வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதைத்தொடர்ந்து  கலெக்டரிடம்  தனித்தனியாக மனு அளித்தனர். மனுவில் கூறியிருப்பதாவது: மத்திய அரசின்  தேசிய கடல் மீன்பிடிப்பு ஒழுங்கு மற்றும் மேலாண்மை மசோதா (2019) பாரம்பரிய  நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், மீன்பிடிப்பு உரிமையையும்  முற்றிலும் அபகரிக்க  கூடியதாகும். மீனவர்களை தினக்கூலியாகவும், உள்நாட்டில்  அகதிகளாகவும் மாற்றும் தன்மையுடையது.

Advertising
Advertising

 மீன் பிடிப்பு கண்காணிப்பு,  கட்டுப்பாடு அதிகாரங்களை இந்திய கடலோர காவல் படையிடம் இந்த மசோதா  ஒப்படைக்கிறது. இதன் மூலம் மாநில அரசின் மீன்வள அதிகாரத்தை மத்திய அரசு  தனது முழு கட்டுப்பாட்டில் கொண்டு வருகிறது.  இதன் மூலம் மத்திய அரசு, கடலை  அபகரித்து பெரும் முதலாளிகளிடம் ஒப்படைக்க முயற்சிக்கிறது. தற்போதைய  சூழலில் 12 கடல் மைலுக்கு உட்பட்ட பகுதிகளில் மீன் வளம் கிடையாது. மீன் உள்ள  இடத்தில் மீன் பிடிக்க அனுமதியில்லை என்பது, பாரம்பரிய நாட்டுப்படகு  மீனவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மீனவர்களின்  வாழ்வாதாரத்தை  பாதிக்கும் அந்த மசோதாவை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். இதை தமிழக  அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.

Related Stories: