2 ஏடிஎம் இயந்திரங்களில் தீ ரூபாய் நோட்டுகள் எரிந்து சாம்பல்: தேனியில் பரபரப்பு

தேனி: தேனியில் இன்று காலை 2 ஏடிஎம் இயந்திரங்கள் திடீரென தீப்பற்றி எரிந்தன. இதில் பல லட்சம் ரூபாய் நோட்டுகள் எரிந்து சாம்பலாகி விட்டன.  தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே ஜமீன்தார் காம்ப்ளக்சில் பாரத ஸ்டேட் வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்தில் 2 ஏடிஎம் இயந்திரங்கள் உள்ளன. இன்று காலை 9 மணிக்கு திடீரென இந்த மையத்தில் இருந்து குபுகுபுவென  புகை வெளி வந்துள்ளது. அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்துள்ளனர். தொடர்ந்து அந்த அறை முழுவதும் மளமளவென தீ கொழுந்து விட்டு எரிந்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Advertising
Advertising

 தகவல் அறிந்து வந்த தேனி தீயணைப்பு படையினர், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது. எனினும் இந்த தீ விபத்தில் 2 இயந்திரங்களிலும் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் நோட்டுகள் எரிந்து சாம்பாலாகி விட்டன. சம்பவ இடத்திற்கு வங்கி அதிகாரிகளும் வந்து பார்வையிட்டனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார்  விசாரித்து வருகின்றனர். ஏடிஎம் இயந்திரங்களில் பணத்தை நிரப்பு பணி, தனியார் ஏஜென்சிகளிடம் உள்ளதால் எரிந்து போன ரூபாய் நோட்டுகளின் சரியான மதிப்பு விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: