ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ஜாமீன் கோரிய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனு மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு

புதுடெல்லி: கடந்த 2007ம் ஆண்டு மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, மும்பையை சேர்ந்த இந்திராணி முகர்ஜி அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோரின் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அன்னிய முதலீடு   மேம்பாட்டு வாரியத்தின் தடையில்லா சான்றிதழ் பெற்றுத் தருவதாகக் கூறி மொரிஷியசில் இருந்து சட்டவிரோதமாக சுமார் ரூ305 கோடி பணம் பெற்றதாகவும், இது அவரது மகன் கார்த்தி சிதம்பரம் நிறுவனத்தின் மூலம் நடந்ததாகவும் குற்றம்  சாட்டப்பட்டது.

இதையடுத்து வழக்கு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகியோர் தரப்பில் அனுப்பப்பட்ட சம்மனுக்கு ஆஜராகி பதிலளிக்காத காரணத்தால் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 5 பிரிவுகளின்கீழ் கைது செய்யப்பட்ட கார்த்தி  சிதம்பரம்  சுமார் 24 நாட்கள் சிறை வாசத்திற்கு பிறகு தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார். இந்த நிலையில், ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி சிபிஐ கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.  இதையடுத்து அவர் தற்போது நீதிமன்ற காவலில் உள்ளார்.

இதற்கிடையே, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி ப.சிதம்பரத்தின் மனுவை டெல்லி உயா்நீதிமன்றம் கடந்த செப்டம்பா் 30-ம் தள்ளுபடி செய்தது. இதைத் தொடா்ந்து, ப.சிதம்பரம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு  தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த மனு கடந்த சில நாட்களுக்கு முன் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பானுமதி, ஏ.எஸ். போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் தலைமையிலான அமா்வு முன் விசாரணைக்கு வந்தபோது,   சிபிஐதரப்பில், ப. சிதம்பரம் வெளிநாடு தப்பிச் செல்லும் அபாயம் இருப்பதாகவும், சாட்சிகளை கலைக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார். சாட்சி ஒருவர் தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக தெரிவித்துள்ளார் என்றும், அவரது பெயர் உள்ளிட்ட  விவரம் சீலிட்ட உறையில் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அவரது வாதத்துக்கு ப. சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் எதிர்ப்பு தெரிவித்தார். ப. சிதம்பரத்தின் பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், லுக் அவுட் நோட்டீஸும் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும்,  அப்படியிருக்கையில் அவரால் எப்படி விமானத்தில் தப்பிச் செல்ல முடியும் என்று சிபல் கேள்வியெழுப்பினார். ப. சிதம்பரத்தின் உடல் எடை 4 கிலோவுக்கும் அதிகமாக குறைந்து விட்டதாகவும், டெங்கு பாதிப்பு அச்சம் இருப்பதால் அவரை  சிறையில் வைத்திருப்பது நீதியில்லை என்றும் கபில் சிபல் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்றம், தீர்ப்பை ஒத்திவைத்தது. இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ஜாமீன் கோரி தாக்கல் செய்த ப.சிதம்பரத்தின்  மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு வழங்குகிறது.

Related Stories: