நொய்யல் ஆற்றில் வெள்ளம்: மருதுறை பாலத்தில் போக்குவரத்து நிறுத்தம்

காங்கயம்: நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மருதுறை பாலத்தில் தண்ணீர் அதிகமாக சென்றதால் 8 மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் வாகன ஓட்டுநர்கள் 5 கிலோ மீட்டர் சுற்றிச் சென்றனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. நொய்யல் ஆற்று நீர்ப்பிடிப்பு வெள்ளிங்கிரி மலைப்பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் நொய்யல் ஆற்றில் நேற்று முன்தினம் இரவு திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் கரையோரத்தில் இருந்தவர்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.  இதையடுத்து நெய்யல் ஆற்றில்  நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஒரத்துப்பாளையம் அணையில் மழை நீர் தேக்கி வைக்கப்படாமல் அப்படியே திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை ஒரத்துப்பாளையம் அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

Advertising
Advertising

இதனால் நத்தக்காடையூர் அடுத்துள்ள மருதுறை ஆற்றுப்பாலம் பகுதியில் நேற்று பாலை 6 மணிக்கு மேல் பாலத்தின் மேல் மூன்று அடி உயரத்திற்கு  தண்ணீர் அதிவேகமாக சென்றது. இதனால் ஈரோடு - திருப்பூர் மாவட்டத்திற்கு நடுவே உள்ள மருதுறை பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.  எனவே நொய்யல் ஆற்றங்கரையோர பகுதியில் உள்ள பொது மக்கள் நொய்யல் ஆற்றில் இறங்கி குளிப்பதற்கும், மீன் பிடிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இப்பகுதி கிராம பொது மக்கள் நொய்யல் ஆற்றில் உள்ள தாழ்வான தரைப்பாலம் வழியாக நடந்து செல்லவும், கனரக, இருசக்கர வாகனங்களில் செல்லவும் தடை விதிக்கப்பட்டது. காங்கயம் வருவாய்த்துறை சார்பில் தாசில்தார் தலைமையிலான வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம நிர்வாக உதவியாளர்கள் நேற்று நொய்யல் ஆற்றங்கரையோரம் உள்ள கிராம பொதுமக்களுக்கு தண்டோரா செய்தும் எச்சரிக்கை செய்தனர். பின்பு நேற்று மாலை 3 மணிக்கு படிப்படியாக வெள்ளம் குறைந்தது. இதன் பின் வாகன போக்குவரத்து துவங்கியது.

Related Stories: