பீகார் மக்கள் குறித்து அவமதிப்பு பேச்சு: டெல்லி முதல்வர் மீது வழக்கு...ஹாஜிபூர் மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவு

ஹாஜிபூர்: பீகார் மக்கள் குறித்து அவமதித்து பேசியதாக கூறி, ஹாஜிபூர் மாஜிஸ்திரேட் நீதிமன்ற உத்தரவுபடி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது  வழக்குப்பதிவு செய்யப்பட்டது.டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்ற போது, ‘‘பீகாரில் இருந்து  மக்கள் 500 ரூபாய் செலவழித்து டிக்கெட் எடுத்து டெல்லிக்கு வருகின்றனர். அவர்கள், டெல்லியில் ரூ.5 லட்சம் அளவுக்கு இலவச மருத்துவ சிகிச்சை  பெற்றுக்கொண்டு திரும்பிச் செல்கிறார்கள்’’ என்று பேசினார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. பீகார் முதல்வர் நிதிஷ் குமாரும்,  கெஜ்ரிவாலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார்.

Advertising
Advertising

இந்நிலையில், பீகார் மாநிலம் ஹாஜிபூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சமூக ஆர்வலர் நிதிஷ்குமார் என்பவர், ஒரு மனு தாக்கல் செய்தார். அதில்,  ‘டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பொறுப்பற்ற பேச்சு என்னை காயப்படுத்திவிட்டது. அவர் நாட்டின் ஒருமைப்பாடு, நல்லிணக்கம், அமைதி  ஆகியவற்றுக்கு அவமதிப்பை ஏற்படுத்த முயற்சிக்கிறார். பிறந்த இடம், மொழி, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் பல்வேறு விதமான குழுக்கள்  இடையே விரோதத்தை உருவாக்கும்படி பேசி உள்ளார். எனவே, அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட  வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

அதையடுத்து, மாஜிஸ்திரேட்  பிரேம் சந்திர வர்மா உத்தரவின்படி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது குற்றவியல் புகார் பதிவு செய்யப்பட்டது. இந்த  மாத தொடக்கத்தில், வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவரும், இதே விவகாரத்தில் முசாபர்பூர் சிவில் நீதிமன்றத்தில் ஒரு மனுவை தாக்கல்  செய்திருந்தார், கெஜ்ரிவாலுக்கு எதிராக எப்.ஐ.ஆர் தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு சிவில் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

Related Stories: