ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே ரயில் பாதை அமைக்க ஆய்வு துவக்கம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் - தனுஷ்கோடி இடையே 80 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரயில் போக்குவரத்தை துவக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.150 கோடி திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ரயில்வே துறையால் கடந்த 8 மாதங்களில் பல கட்டங்களாக ரயில் போக்குவரத்துக்கான தண்டவாளம், பாலங்கள் அமைப்பது, ரயில் நிலையம் கட்டுமிடம் தொடர்பான நிலம் சர்வே செய்யும் பணி நடத்தப்பட்டது. கடந்த சில நாட்களாக தனுஷ்கோடியில் பழைய ரயில்வே ஸ்டேஷன் இருந்த பகுதியில் பிளாட்பாரங்கள், ரயில் நிலைய கட்டடங்கள் கட்டுவதற்கான நிலத்தடி மணல் ஆய்வு பணி நடந்து வருகிறது. தனுஷ்கோடியில் தேசிய நெடுஞ்சாலைக்கும்,

வடக்கு கடற்கரைக்கும் இடைப்பட்ட பகுதியில் பழைய ரயில் நிலையம் அமைந்திருந்த பகுதியில் துளையிடும் இயந்திரத்தின் மூலம் பல இடங்களில் நிலத்திற்குள் துளையிட்டு மண் மாதிரி சேகரிக்கப்படுகிறது. இங்கு சேகரிக்கப்படும் மண் மாதிரிகள் ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு மண்ணின் தன்மை ஆய்வு செய்யப்படும். நிலத்திற்கு அடியில் கட்டிடம் கட்டுவதற்கு ஏதுவாக மணலின் தன்மை உள்ளதா என்பது குறித்த ஆய்வுக்குப்பின் அறிக்கை பெறப்பட்டு, ரயில் பாதை அமைப்பது, ரயில் நிலையம் கட்டுவது குறித்த அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: