சேலம் அரசு மருத்துவமனைக்கு மாதம் 2 டன் பிரட் சப்ளை சிறை கைதிகளுக்கு அனுமதி

சேலம்: சேலம் மத்திய சிறையில் உள்ள 100க்கும் மேற்பட்ட நன்மதிப்பு பெற்ற தண்டனை கைதிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரும் வகையில், கைத்தொழில் கற்றுக்கொடுக்கப்படுகிறது. இவர்கள் மூலம் மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் இரும்பு கட்டில்கள் தயாரித்து வழங்கப்படுகிறது. தற்போது பன், பிரட், தேங்காய் பன், பிஸ்கட் ஆகியவையும் தயாரிக்கப்பட்டு வருகிறது. இவை சிறையின் முன் பகுதியில் உள்ள பிரிசன் பஜாரில் வைத்து விற்பனை செய்யப்படுகிறது. பன் 5 ரூபாய், பிரட் 25 ரூபாய், தேங்காய் பன் ரூ25 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் விற்பனையை அதிகரிக்கும் விதமாக சேலம் அரசு மருத்துவமனைக்கு தேவையான பிரட் தயாரித்து சப்ளை ஆர்டர் தருமாறு கேட்டனர்.

அவர்கள் மாதம் 2 டன் பிரட் சப்ளை செய்ய ஆர்டர் தந்துள்ளனர். இதனால் கைதிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 200 கிராம் பிரட் விலை ரூ12.50 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2 டன் பிரட்டுக்கு மாதம் ரூ1.25 லட்சம் கிடைக்கும். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘வெளிமார்கெட்டில் 300 கிராம் பிரட் ரூ28க்கு விற்கின்றனர். நாங்கள் 200 கிராம் பிரட் ரூ12.50 என நிர்ணயித்துள்ளோம். வரும் 1ம்தேதி முதல் மருத்துவமனைக்கு வழங்க இருக்கிறோம்,’’ என்றனர்.

Related Stories: