தமிழகத்தில் உள்ள 412 மையங்களில் நடக்கிறது அரசு பள்ளிகளில் திட்டமிடல் இல்லாமல் நடக்கும் நீட், ஜெஇஇ பயிற்சி வகுப்புகள்: தனியே ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்களா?

நாகர்கோவில்: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் திட்டமிடலின்றி நடைபெறும், நீட் ஜெஇஇ பயிற்சி வகுப்புகளால் இந்த மையங்கள் சம்பிரதாயத்திற்கு பயிற்சி அளிக்கும் மையங்களாக மாறியுள்ளன. தமிழக அரசின் பள்ளிக்கல்வி துறை சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள 412 மையங்களில் நீட் தேர்வு இலவச பயிற்சி வகுப்பு கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி தொடங்கப்பட்டது. மாவட்டத்திற்கு 300க்கும் மேற்பட்டவர்கள் வீதம் இந்த பயிற்சி வகுப்புகளில் சேர்ந்துள்ளனர். நீட் பயிற்சிக்கு அரசு மேல்நிலை பள்ளிகளில் அறிவியல் பாடம் போதிக்கின்ற ஆசிரியர்களே நியமிக்கப்பட்டுள்ளனர். வார நாட்களில் பள்ளிகளில் வகுப்பு எடுக்கும் இந்த ஆசிரியர்கள் அடுத்து வரும் வெள்ளி, சனி, ஞாயிற்றுகிழமைகளில் நீட் பயிற்சி அளிக்க செல்ல வேண்டும்.

இதனால் வாரத்தின் அனைத்து நாட்களும் ஆசிரியர்கள் பணி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஒரே ஆசிரியர் நீட் பயிற்சி வகுப்பில் மூன்றரை மணி நேரம் தொடர்ச்சியாக காலை 10 மணி முதல் 1.30 மணி வரை வகுப்பு எடுக்கும் சூழல் உள்ளது. பயிற்சி வகுப்புகளில் ஒரு வகுப்பு எடுக்க ஆசிரியர் ஒருவர் ஒருவாரகாலம் தங்களை தயார்படுத்திக்கொண்டால் மட்டுமே நீட் தேர்வுக்கான கேள்விகளை தயார் செய்து பயிற்றுவிக்க முடியும் என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். நீட் பயிற்சிக்கு செல்கின்ற ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புக்கு நாள் ஒன்றுக்கு ₹250 உழைப்பூதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு கூட இன்னமும் உழைப்பூதியம் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டு உள்ளது.

வெள்ளிக்கிழமைகளில் மாலை 3 மணியில் இருந்து 6 மணி வரை பயிற்சி நடைபெறுகிறது. அந்த வேளையில் பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்களை நீட் தேர்வு பயிற்சிக்கு செல்கின்ற மாணவர்கள் கவனிக்க முடிவது இல்லை, இதற்கான கேள்வித்தாள், விடைகள் ஆன்லைனில் அனுப்பி வைக்கப்படுகிறது. மின்தடை, இணையதள பிரச்னையால் இவற்றை முழுமையாக அரசு பள்ளிகளில் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது என்பது போன்ற குளறுபடிகள் தொடர்கின்றன. இது தொடர்பாக ஆசிரியர்கள் மேலும் கூறுகையில், பள்ளிகளில் புதிய பாட திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது அவை நடைமுறையில் இருப்பதால் அவற்றை சிறப்பாக முன் தயாரிப்பு மேற்கொண்டு மாணவர்களுக்கு போதிப்பது ஆசிரியர்களுக்கு சவாலாக இருந்து வருகிறது. இந்தநிலையில் அதே ஆசிரியர்கள் நீட், ஜெஇஇ பயிற்சி வகுப்புக்கும் தங்களை தயாராக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதனால் பள்ளிகளில் பயில்கின்ற அனைத்து மாணவர்களின் கல்வித்தரமும் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. எனவே தமிழகத்தில் நீட் பயிற்சி என்பது கட்டாயமாகிவிட்டதால் இதற்காக தனியாக ஆசிரியர்களை கொண்ட பயிற்சி குழுக்களை ஏற்படுத்தி, அதற்கான கருவிகளையும், புத்தகங்களையும், உரிய வழிகாட்டுதல் பயிற்சிகளையும் வழங்க வேண்டும். வாரந்தோறும் நடைபெறும் நீட் தேர்வுகளை மாணவர்களின் பாட வேளைக்கு பின்னர் பயிற்சி மையங்களில் வைத்து நடத்த முன்வர வேண்டும். பயிற்சி மையங்களில் தொடர்ந்து பணியாற்ற புதிதாக ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும். இவ்வாறு புதிதாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் குழு நீட், ஜெஇஇ மட்டுமின்றி அனைத்து வகையான போட்டித்தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார் படுத்தும் வகையில் பயிற்சி அளிக்க திறன் பெற்றவர்களாக தேர்வு செய்யப்பட வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை மேம்படுத்த மாணவர்களுக்கு இலவச பொருட்களை பெற்று வழங்க தனியே அலுவலரை நியமிக்க வேண்டும்.  இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: