வீடு வழங்கும் திட்டத்தில் தொய்வு...எத்தனை பேரை வேண்டுமானாலும் சஸ்பெண்ட் செய்ய தயார்: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரின் ஆடியோ வைரல்

திருவண்ணாமலை: அரசு தொகுப்பு வீடுகள் வழங்கும் திட்டத்தில் உரிய பயனாளிகளுக்கு வீடுகளை வழங்காமல் தாமதிக்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி எச்சரித்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசிய ஆடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அரசின் வீடு வழங்கும் திட்டங்களில் தொய்வு இருப்பதாக கண்டிப்பு காட்டியுள்ள அவர் எத்தனை பேரை சஸ்பெண்ட் செய்வேன் என தனக்கே தெரியாது என கோபமுடன் பேசியுள்ளார். இது தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அனுப்பிய ஆடியோ பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது, அரசு திட்டப்பணிகள் மிகவும் தொய்வாக உள்ளது என ஏற்கனவே நடத்தப்பட்ட கூட்டத்தில் பேசியிருப்பதாக தெரிவித்தார். இது தொடர்பாக, அரசாங்கத்திடம் இருந்து பல கேள்விகள் கேட்கப்பட்டு வருகிறது.

அதற்கு நாங்கள் பதிலளித்து வருகிறோம். முன்பு நடத்தப்பட்ட கூட்டத்தில் தொகுப்பு வீடு வழங்குவதில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இருப்பினும் அரசு தரப்பில் தொகுப்பு வீடுகள் இருந்தும் ஏன் உரியவர்களுக்கு கொடுக்கப்படவில்லை என அதிக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இன்றும் கூட விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் இது தொடர்பாக புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. எனவே வரும் திங்கட்கிழமை உச்சக்கட்டம் என தெரிவித்த அவர், நான் இந்த மாவட்டத்தில் இருக்கிறேனா அல்லது நீங்கள் பணியில் இருக்கிறீர்களா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள் என கூறியிருக்கிறார். திங்கட்கிழமைக்குள் தொகுப்பு வீடுகள் அனைவருக்கும் கொடுத்திருக்க வேண்டும்.

அப்படியில்லையென்றால், எத்தனை பேரை வேண்டுமானாலும் நான் சஸ்பெண்ட் செய்ய தயாராக உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனை எப்படிவேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று கூறியவர் let us face this war on Monday என கூறினார். இதனை மிகவும் தீவிரமாக பார்க்கப்போவதாகவும், இனி தான் பொறுமையாக இருக்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். அலுவலர்கள் தப்பு செய்வதை பார்த்துக்கொண்டிருப்பதற்கு நான் இங்கு வரவில்லை, சரிசெய்வதற்காகவே பணியில் இருக்கிறேன். இது எனது உச்சகட்ட கோபம் என கூறினார். திங்கட்கிழமை பணிக்கு வரும் அலுவலர்கள் வீடு திரும்பும் போது வேலையுடன் திரும்புவீர்களா, வேலையில்லாமல் போவீர்களா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருவதுடன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: