திருடிய நகைகளை விற்று 2 தெலுங்கு படம் எடுத்த கொள்ளையன் முருகன்: தமிழ் நடிகைக்கு நகைகள் பரிசளிப்பு,..விசாரணையில் பரபரப்பு தகவல்கள்

திருச்சி: திருச்சி நகை கடை கொள்ளையில் தொடர்புடைய கும்பல் தலைவன் பல நடிகைகளுடன் உல்லாசமாக இருந்ததும், தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து பல வெற்றி பட தந்த கதாநாயகிக்கு நகைகளை பரிசாக  அளித்ததும் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.  திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரியில் கடந்த 2ம் தேதி அதிகாலை 13 கோடி மதிப்பிலான 29 கிலோ எடையுள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.  இதுதொடர்பாக திருவாரூர் சீராத்தோப்பை சேர்ந்த மணிகண்டன், கொள்ளை கும்பலின் தலைவன் முருகன் என்பவரின் அக்கா கனகவல்லி, முருகனின் கூட்டாளிகள் கணேசன், ராதாகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.  கனகவல்லியின் மகன் சுரேஷ் செங்கம் நீதிமன்றத்திலும், முருகன் பெங்களூரு நீதிமன்றத்திலும் சரணடைந்தனர்.

இவர்களில் சுரேசை பெங்களூர் போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள். எனினும், சுரேசை திருச்சி போலீசாரும் காவல் விசாரிக்க ஜேஎம் நீதிமன்றத்தில் அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்துள்ளனர். அந்த மனு, பெங்களூரு  பரப்பன அக்ரஹார சிறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், சுரேசிடம் பெங்களூர் போலீசார் நேற்று 3-வது நாளாக விசாரணை நடத்தினர்.  விசாரணையில் சுரேஷ் பல திடுக்தகவல்களை தெரிவித்துள்ளான்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: கொள்ளையடித்து சேர்த்து வைத்திருந்த பணத்தில் எனது மாமா முருகன் என்னை கதாநாயகனாக வைத்து சினிமா படம் எடுக்க விரும்பினார். அதன்படி, 2013ல் தெலுங்கில் ‘ஆத்மா’ என்ற  படத்தை எடுத்தோம். ஆனால் இந்த படத்தின் சூட்டிங் 45 நாள்தான் நடந்தது. அதன்பிறகு நின்று விட்டது. அதன்பின்னர் அதே தெலுங்கில் மான்சா என்ற பெயரில் இன்னொரு படம் எடுத்தோம். அந்த படம் முழுவதுமாக எடுக்கப்பட்டது.  கதாநாயகியாக நடித்த நடிகைக்கு 50 லட்சம் சம்பளம் பேசப்பட்டது. அட்வான்சாக 6 லட்சம் தரப்பட்டது. மீதி தொகை தராததால், அவர் ஐதராபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இதனால் சூட்டிங் முடிந்தும் படம் ரிலீசாகவில்லை. அதேபோல் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கொள்ளையடித்த பிறகு மீண்டும் படம் எடுக்க தற்போது தமிழ் முன்னணி கதாநாயகன்களுடன் நடித்து பல வெற்றி பட தந்த வரும் நடிகையை  நானும், முருகனும் சந்தித்தோம். நாங்கள் நகைக்கடை வைத்துள்ளோம். நாங்கள் எடுக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டோம். ஆனால் பிசியாக இருப்பதால், கால்ஷீட் இல்லை என்று அந்த நடிகை  கூறிவிட்டார்.  அப்போது வங்கியில் கொள்ளையடித்த நகைகள் சிலவற்றை அந்த நடிகைக்கு முருகன் பரிசாக அளித்தார். அதை அவர் வாங்கிக்கொண்டார். மேலும் கொள்ளையடித்த பணத்தில் தமிழிலும், தெலுங்கிலும் பல நடிகைகளுடன்  நானும், எனது மாமாவும் உல்லாசமாக இருந்துள்ளோம். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நடிகைகளிடம் விசாரணை நடத்த முடிவு

சுரேஷின் இந்த வாக்குமூலத்தை வைத்து முருகன், சுரேஷ் கும்பலுடன் தொடர்பில் இருந்த நடிகைகள் யார் என்பதை தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையடித்த நகை, பணத்தை நடிகைகள் யாரிடமாவது முருகன்  கொடுத்து வைத்திருக்கிறானா, தெலுங்கில் நடந்தது போல், தமிழகத்தில் எந்த நடிகையாவது முருகனால் பாதிக்கப்பட்டுள்ளாரா என்றும் போலீசார் விசாரிக்கின்றனர். இதனால், அவருடன் உல்லாசமாக இருந்த பல நடிகைகள் கிலியில் உள்ளனர்.

மொட்டையடித்து தனிப்படை போலீசார் நேர்த்திக்கடன்

திருச்சி மாவட்டம் சமயபுரம்  நெ.1 டோல்கேட்டில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த ஜனவரி  27ம் தேதி அதிகாலையில் நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் வங்கி லாக்கரை உடைத்து  470 சவரன் நகைகள் மற்றும் ₹19  லட்சம்  ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக 3 தனிப்படைகள் அமைத்து   கொள்ளையர்களை பல்வேறு மாநிலங்களில் போலீசார் தேடி வந்தனர். கொள்ளையர்கள் பிடிபட்டால் மொட்டையடித்து கொள்வதாக தனிப்படை போலீசார்  சமயபுரம் கோயிலில் வேண்டிக்கொண்டனர். இந்தநிலையில் திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த வழக்கில் சிக்கியுள்ள முருகன் தலைமையிலான கும்பல்தான் பஞ்சாப் நேஷனல் வங்கியிலும் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது.  கொள்ளையர்கள் சிக்கியதால் தனிப்படை போலீஸ்காரர்கள் விஜயகுமார், ஹரிகரன் ஆகியோர் கோயிலில் மொட்டை அடித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

Related Stories: