திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கற்தூண்களில் பாதிப்பு இருந்தால் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்: இணை ஆணையர் விளக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கற்தூண்களில் ஏதாவது பாதிப்பு இருந்தால் அவற்றை சரி செய்யநடவடிக்கை எடுக்கப்படும் என்று கோயில் இணை ஆணையர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அம்மன் சன்னதி எதிரில் நவக்கிரக சன்னதி அருகே அபிஷேக கிணற்றை சுற்றிலும் கற்தூண்களை சிதைத்து, இரும்பு தடுப்பு வேலி அமைத்திருப்பதாக சமூக வலைதளங்களில் வீடியோ வெளியானது. இதனால், பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை கோயில் இணை ஆணையர் ஞானசேகர் நேற்று பார்வையிட்டார். இதுதொடர்பாக, கோயில் ஆவணங்களில் உள்ள விபரங்கள் ஆய்வு செய்யப்பட்டன. பின்னர் அவர் கூறியதாவது: அண்ணாமலையார் கோயிலில் உள்ள அபிஷேக தீர்த்த கிணற்றை சுற்றிலும் பாதுகாப்பு அவசியம் கருதி, 1966ம் ஆண்டு இரும்பு சட்டம் கொண்டு கிரில் கேட் பொருத்தியுள்ளனர். இந்த பணியை அப்போது மேற்கொண்ட நபரின் கடிதம், கோயில் ஆவண பதிவேட்டில் தற்போதும் உள்ளது.

எனவே, கற்தூண்களையும், சிற்பங்களையம் சிதைத்து இரும்பு கேட் அமைப்பதாக வாட்ஸ் அப், முகநூல் போன்றவற்றில் பரவுவது போல, இந்த பணி சமீபத்தில் நடந்தது இல்லை. அபிஷேக கிணறு அருகே செல்லும் பக்தர்கள், அதை பொது தீர்த்தமாக நினைத்து பொருட்கள் மற்றும் நாணயங்கள் வீசுவதையும், பக்தர்களின் பாதுகாப்பு கருதியும் இந்த தடுப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கற்தூண்கள் மற்றும் அதற்கென பிரத்யேகமாக உள்ள வேதிப்பொருட்களை கொண்டு சுமார் அரை இன்ச் அளவில் துளையிடப்பட்டுள்ளதை உறுதிபடுத்தவும், அந்த பகுதியில் எந்தவித வேறுபாடும் தெரியாதபடி கற்தூண்கள் அழகாக காட்சியளிக்கவும் தேவையான பணிகளை மேற்கொள்ள தொல்லியல் பொறியாளரிடம் ஆலோசனை கேட்டிருக்கிறோம். விரைவில் அந்த பணி தொடங்கும். இனி வரும் காலங்களில் பாதுகாப்பு கிரில் கேட் அமைக்கும் பணி நடந்தால், அதற்காக கற்தூண்கள் மற்றும் சிற்பங்கள் இல்லாத இடத்தில் இரும்பு பெடல் அமைத்து கிரில் கேட் அமைக்கப்படும். மேலும், வேறு ஏதேனும் தூண்களில் பாதிப்பு இருந்தாலும் அவற்றையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: