மாலையுடன் விசாரணை நிறைவு: அயோத்தி வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அறிக்கையை தாக்கல் செய்தது மத்தியஸ்த குழு

டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராம ஜென்ம பூமி  - பாபர் மசூதி நில விவகாரத்தை உச்ச  நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 5  நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி முதல் தினசரி விசாரித்து வருகிறது. அடுத்த மாதம் 17ம் தேதி  ரஞ்சன் கோகாய் பதவி ஓய்வு பெற  உள்ளதால் அதற்கு முன் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது இந்து அமைப்பான ராம் லாலா சார்பில் வக்கீல் பராசரன் வாதம் செய்தார். அவர் வாதிடுகையில்,  `‘அயோத்தியில் மட்டும் 60 மசூதிகள் வரை உள்ளன. அதில் எந்த   மசூதியிலும் இஸ்லாமியர்கள் தொழுகை செய்யலாம். ஆனால், இந்துக்கள் ராமர் பிறந்த இடமாக நம்பப்பட்டு  ஏற்றுக்கொள்ளப்பட்ட இடத்தை மாற்ற முடியாது,’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள் கூறுகையில், `இன்று 39வது நாள் விசாரணை  முடிந்துள்ளது. நாளையுடன் விசாரணை  நிறைவடைந்து விடும். வழக்கின் தீர்ப்பு நவம்பர் 4 அல்லது 5ம் தேதி வழங்கப்படும்’,’ என அறிவித்தனர்.

இதற்கிடையே, அயோத்தி நில உரிமை வழக்கில் தம்மையும் சேர்க்க கோரிய இந்து மகாசபையின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், அயோத்தி வழக்கில்  இன்று மாலை 5 மணிக்குள் வாதங்களை நிறைவு செய்ய  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட  3 பேர் கொண்ட மத்தியஸ்த குழு, பேச்சுவார்த்தையின் போது எடுக்கப்பட்ட முடிவுகள் அடங்கிய ஆவணங்களை, அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. ஓய்வுபெற்ற  நீதிபதி கலிஃபுல்லா, ஸ்ரீஸ்ரீரவிசங்கர், மூத்த வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம்பெற்ற மத்தியஸ்த குழு அறிக்கையை தாக்கல் செய்தது.

நீதிபதிகள் அதிருப்தி:

அயோத்தி வழக்கு குறித்து இந்து அமைப்புகள் தாக்கல் செய்த புத்தகத்தை இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜூவ் தவான் கிழித்தெறிந்தார். மேலும், ராஜூவ் தவான் கோபமாக வாதத்தை முன்வைத்ததால் நீதிபதிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். வாதத்தின்போது, வழக்கறிஞர்கள் இப்படி நடந்து கொண்டால் எழுந்து சென்று விடுவோம் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர்.

Related Stories: