12 நாடுகளின் படங்கள் திரையிடப்படுகிறது: 6வது உலக திரைப்பட விழா... தி.மலையில் நாளை தொடக்கம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், 6வது உலக திரைப்பட விழா நாளை தொடங்கி வரும் 20ம்தேதி வரை நடக்கிறது. கடந்த ஆண்டுகளில் தேனி, கம்பம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நடந்த உலக திரைப்பட விழா முதன்முறையாக திருவண்ணாமலையில் இந்த ஆண்டு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவில், ஆஸ்கர் விருது பெற்ற கிரீன்புக், பல்வேறு விருதுகளை குவித்த மலையாள மொழி படமான கும்பலங்கி நைட்ஸ், அமெரிக்காவின் புகழ்பெற்ற படமான பப்ளிக் லைப்ரரி, ஹங்கேரி நாட்டு படமான ேகால்ட் வார், தமிழில் வெளியான டூலெட் உள்பட 12 நாடுகளைச் சேர்ந்த 23 புகழ்பெற்ற திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. திரையிடல் முடிந்ததும், அது தொடர்பான கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும்.

மேலும், திரையிடல் நடைபெறும் ஒவ்வொரு நாளும், சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில், திரைப்பட இயக்குநர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். திரைப்பட விழாவின் தொடக்க விழா திருவண்ணாமலை செங்கம் சாலையில் உள்ள ஒரு திரையங்கில் நாளை நடக்கிறது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி விழாவை தொடங்கி வைக்கிறார். விழாவில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க கவுரவத் தலைவர் தமிழ்ச்செல்வன், அறம் திரைப்பட இயக்குநர் கோபிநயினார், சு.வெங்கடேசன் எம்பி உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர். இதுகுறித்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்க மாநில துணைப் பொதுசெயலாளர் எஸ்.கருணா கூறியதாவது:

தொடர்ந்து 5 நாட்கள் நடைபெறும் உலகத் திரைப்பட விழாவில் நடிகை ேராகிணி, இயக்குநர்கள் ராஜூமுருகன், லெனின்பாரதி, பிரம்மா, மாரி செல்வராஜ் உள்ளிட்ட திரைப்படத்துறையினர் மற்றும் எழுத்தாளர்கள் ஆதவன்தீட்சண்யா, தேவேந்திரபூபதி, ஷாஜி, உமாதேவி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். 12 நாடுகளைச் சேர்ந்த 23 புகழ்பெற்ற திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. திரையிடல் முடிந்ததும், அது தொடர்பான கலந்துரையாடல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். அதில், பார்வையாளர்கள் கலந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார். அப்போது, விழா வரவேற்புக்குழு தலைவர் எஸ்.குழந்தைவேலு, செயலாளர் மு.பாலாஜி உட்பட பலர் உடனிருந்தனர்.

Related Stories: