கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் பழநி கோயிலில் பணியை புறக்கணித்து முடி திருத்தும் ஊழியர்கள் போராட்டம்

பழநி: பழநிகோயில் முடி காணிக்கை மையத்தில் கூடுதல் வசூலிக்கப்படுவதாக புகார் கிளம்பியதை தொடர்ந்து ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்த வசதியாக அடிவார பகுதிகளில் 5க்கும் மேற்பட்ட முடிக்காணிக்கை மையங்கள் கோயில் நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இங்கு முடி காணிக்கை செலுத்தும் பக்தர்களிடம் கட்டணமாக ரூ. 30 வசூலிக்கப்படுகிறது. ரூ.5 கோயில் நிர்வாகத்திற்கும், ரூ.25 முடி திருத்தம் செய்யும் தொழிலாளர்களுக்கும் வழங்கப்படுகிறது. இதில் போதிய வருவாய் இல்லை என்றும், அதனால் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக முடிதிருத்தும் தொழிலாளர்கள் மீது புகார் எழுந்து வந்தது. நேற்று வார விடுமுறை என்பதால் பழநி கோயிலுக்கு பக்தர்களின் வருகை அதிகமாக இருந்தது. முடிக்காணிக்கை மையத்தில் கூட்டம் அலைமோதியது. பக்தர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்து வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, முடிதிருத்தும் தொழிலாளர்கள் பணியை புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கோயில் துணை ஆணையர் செந்தில்குமார் தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.   இதனைத் தொடர்ந்து மீண்டும் பணிக்கு திரும்பினர். 1 மணிநேரத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டதால் முடி காணிக்கை செலுத்த வந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். தைப்பூசம் மற்றும் பங்குனி உத்திரம் போன்ற திருவிழா நேரங்களில் இதுபோன்ற போராட்டங்களில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஈடுபட்டால் பெரிய அளவில் பக்தர்கள் பாதிக்கப்படுவர் என்பதால் கோயில் நிர்வாகம் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு ஊதியம் நிர்ணயம் செய்து ஒழுங்குபடுத்த வேண்டும் என பக்தர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: