கடந்த 8 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை: மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

விழுப்புரம்: ``கடந்த 8 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் எதையும் செயல்படுத்தவில்லை’’ என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் புகழேந்தியை ஆதரித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று இரண்டாவது நாளாக கப்பியாம்புலியூர், பனையபுரம், வி.சாலை உள்ளிட்ட இடங்களில் திண்ணை  பிரசாரம் செய்து மக்கள் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் பேசியதாவது:  கடந்த மக்களவை தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்று இந்தியாவிலேயே 3வது மிகப்பெரிய கட்சியாக பெருமைப்படுத்தி தந்த உங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இங்கே அமர்ந்திருக்கும் 10 பேரை அழைத்து பேசச்சொன்னால்  என்ன பேசுவீர்கள் என்று தெரியும். குடிநீர் வரவில்லை, சாலை வசதியில்லை, பேருந்து வசதியில்லை என்று கூறுவீர்கள். இங்கு மட்டுமல்ல தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்னை உள்ளது. முதியோர் உதவித்தொகை இல்லை.

தேசிய ஊரக  வேலையில்லை என்று அடுக்கடுக்காக கூறுவீர்கள்.  தி.மு.க. ஆட்சியில் பெண்கள் யாருடைய தயவுமின்றி, தன்னம்பிக்கையுடன் சொந்தகாலில் நிற்க மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தை நான் துணை முதல்வராக  இருந்த போது வழிநடத்தி சென்றேன். 5 ஆண்டுகளில் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு சுழல்நிதியை 5, 6 மணி நேரம் நின்று கொண்டே வழங்கினேன். ஆனால் இன்றைய அதிமுக ஆட்சியில் மகளிர்  சுயஉதவிக்குழுக்களுக்கு கடனுதவி, சுழல்நிதி வழங்குவது கிடையாது.  8 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை. உள்ளாட்சி தேர்தல் நடந்திருந்தால் தேர்வு செய்யப்படும் கவுன்சிலர், மேயர், தலைவர்கள் மூலம் சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகளுக்கு  உடனுக்குடன் தீர்வு காணமுடியும். 8 ஆண்டாக தேர்தல் நடத்தாமல் உள்ளனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதல் வேலையாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்.

தமிழகத்தில் சுகாதாரத்துறை உள்ளிட்ட எல்லாத்துறைகளிலும் ஊழல் பெருகிவிட்டது. ஜெயலலிதா சாவில் மர்மம் இருப்பதாக ஓபிஎஸ் கூறினார். ஜெயலலிதா மரணத்தின்போது இடைக்கால முதல்வராக இருந்த ஓபிஎஸ் அப்பதவியிலிருந்து தூக்கப்பட்டு சசிகலாதான் முதல்வர் என அறிவிக்கப்பட்டார். அதற்குள் ஊழல் வழக்கில்  உச்சநீதிமன்றம் தண்டனையை உறுதி செய்ததால் சிறைக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. முதல்வராக முடியாத நிலையில் கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்களை அழைத்து முதல்வர் யார் என்று ஆலோசனை நடத்தினார்.  அப்போது சசிகலாவின் காலில் ஊர்ந்து, தவழ்ந்து கொண்டு எடப்பாடி சென்றார். சரியான அடிமை இருப்பதாக கருதி சசிகலாவால் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.

முதல்வரான பிறகு, சசிகலாவை சிறையில்கூட சென்று சந்திக்காமல்,  ஆறுதல் கூறாமல் துரோகம் செய்தவர் எடப்பாடி பழனிசாமி. ஓபிஎஸ், ஜெவின் நினைவிடத்திற்கு சென்று 40 நிமிடம் தியானம் செய்தார். அம்மாவின் ஆத்மா பேசியதாக கூறிய அவர், ஜெயலலிதாவின் மரணம் குறித்து நீதி விசாரணை  நடத்தவேண்டும் என்று கூறினார். பின்னர் துணை முதல்வரான பிறகு இதை கேட்கவேயில்லை.  ஆறுமுகசாமி விசாரணை கமிஷனிலும், 5 6 முறை நீதிபதி ஆஜராகுமாறு அழைத்தும் போகாமல் இருக்கிறார். தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்க நிச்சயம் நடவடிக்கை  எடுக்கப்படும். தமிழகத்தில் நடக்கும் அக்கிரம, அநியாய ஆட்சிக்கு முடிவு கட்ட முன்னோட்டமாக இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு வாக்களிக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.  பின்னர் நேற்று மாலை நல்லாப்பாளையம், கடையம், பனமலை உள்ளிட்ட இடங்களில் வேன் பிரசாரத்தில் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டார்.

Related Stories: