இடைத்தேர்தல் சுதந்திரமாக நடக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்: காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை: நாங்குநேரி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவினர் பல்வேறு சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.  மக்கள் விரோத அதிமுக அரசு மீது மக்கள் கடும் கோபத்துடன் இருப்பதால், ஆட்சியாளர்கள் பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கட்சியினர் மீது பயன்படுத்தி வருகிறார்கள். நாங்குநேரி தொகுதியில் பிரசாரம் செய்வதற்காக அமைச்சர்  வெல்லமண்டி நடராஜன் மூலக்கரைப்பட்டிக்கு வந்த போது அந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்துகிற வகையில் அவரை கிராமத்திற்குள் நுழையக் கூடாது என்று அமைதியான முறையில்  போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

இதற்காக நாங்குநேரி ஒன்றிய புதிய தமிழகம் கட்சி செயலாளர் தளவாய் பாண்டி மீது மூலக்கரைப்பட்டி போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்திருக்கின்றனர். நாங்குநேரி இடைத் தேர்தலில் அதிமுகவினர், காவல்துறையின்  துணையோடு எடுத்து வரும் ஜனநாயக, சட்டவிரோத செயல்களை கைவிட்டு, கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். காவல்துறையினரின் இத்தகைய செயல்களை உடனடியாக தடுத்து  நிறுத்தி, சுயேட்சையாகவும், சுதந்திரமாகவும், பாரபட்சமின்றி நாங்குநேரி சட்டமன்ற இடைத் தேர்தல் நடப்பதற்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.  இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

Related Stories: