ஓசூரில் வரும் 19, 20ம் தேதியில் அண்ணா பிறந்தநாள் இறுதி போட்டிகள்: திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

சென்னை:  ஓசூரில் வரும் 19 மற்றும் 20ம் தேதிகளில் அண்ணா பிறந்தநாள் இறுதி போட்டிகள்நடக்கிறது என்று திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். சென்னை தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி சார்பில் அண்ணாவின் 111வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு உயர்நிலை-மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு பேச்சுப் போட்டி, கவிதை ஒப்பித்தல் போட்டி, கட்டுரை போட்டி  மற்றும் பரிசளிப்பு விழா விருகம்பாக்கத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியினை மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். திமுக இளைஞர் அணி துணைச் செயலாளர் எஸ்.ஜோயல், தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி,  தலைமை செயற்குழு உறுப்பினர் க.தனசேகரன் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.  விழாவில் திடீரென இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு பள்ளி மாணவ-மாணவிகளை ஊக்கப்படுத்தினார். போட்டியில் 828  மாணவர்கள் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆறுதல் பரிசாக 10 பேருக்கு தலா ரூ.1000 வழங்கப்பட்டது. விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: அண்ணா பிறந்தநாள்  விழாவை முன்னிட்டு இளைஞர் அணியால் பள்ளி மாணவ மாணவியருக்கு நடத்தப்படும் கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகள் நம் தலைவரின் மனதுக்கு மிகநெருக்கமானவை.  கடந்த 11 ஆண்டுகளில் இந்தப் போட்டிகளில் பங்கேற்பதை நம் தலைவர் தவற விட்டதே கிடையாது. எங்கிருந்தாலும் இதில் கலந்து கொள்வார் என்று மறக்காமல் குறிப்பிடுவார். இந்த ஆண்டுக்கான அண்ணா பிறந்தநாள் போட்டிகள் நெருங்க  நெருங்க எனக்குள் ஒரு சின்ன பதற்றம். ஏனெனில், நான் இளைஞர் அணிச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு நடத்தப்படும் முதல் போட்டி. இதற்கு முன்பு 11 ஆண்டுகளாக தொய்வில்லாமல் தொடர்ந்து நடத்தப்பட்ட இந்த போட்டிகள், இந்த  ஆண்டும் சிறப்பாக நடத்தப்பட்டு விடும் என்பதை அறிவேன்.

தமிழகம், புதுவையில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் போட்டிகளை வழக்கத்தைவிட சிறப்பாக நடத்தி பிரமாதப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு மாவட்டங்களிலும் நடந்த போட்டிகளில் மூன்றாம் பரிசு, 10 ஆறுதல் பரிசுகள், கலந்து கொண்ட  அனைவருக்கும் சான்றிதழ்கள் உள்ளிட்ட சிறப்புச் செய்தல் மாவட்டத்திலேயே வழங்கப்பட்டு விடும். ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்தவர்கள், மாநில அளவில் நடைபெறும் இறுதிப்போட்டியில் கலந்து  கொண்டு போட்டியிடுவர். இந்த ஆண்டுக்கான அண்ணா பிறந்தநாள் இறுதிப் போட்டிகள் வருகிற 19, 20ம் தேதிகளில் ஓசூரில் நடைபெற உள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: