தமிழகம் முழுவதும் கொத்தடிமைகளாய் தவிக்கும் வடமாநில தொழிலாளர்கள்

* குறைந்த கூலி வழங்கி உழைப்பை சுரண்டும் அவலம்

* வேலைவாய்ப்பை இழக்கும் உள்ளூர் தொழிலாளர்கள்

வேலூர்: தமிழகம் முழுவதும் கட்டுமான நிறுவனங்கள், அது தொடர்பான நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களில் குறைந்த கூலியில் வடமாநில தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் கொத்தடிமைகளாய் உழன்று வருவதாக வேதனை குரல்கள் எழுந்துள்ளன. நாள் ஒன்றுக்கு 8 மணி நேர வேலை, உழைப்புக்கேற்ற ஊதியம், உழைப்பாளர்களுக்கான பாதுகாப்பு என்று தொழிலாளர்களுக்கென தனியான உரிமைகள் ஒவ்வொரு நாட்டிலும் வழங்கப்பட்டுள்ளன. அந்த விதிகள் பல வகைகளிலும் மீறப்பட்டு வருவது உலகம் முழுவதுமே ஒரு வகையில் கண்டுக் கொள்ளப்படாமல் உள்ளது. இந்தியாவிலும் அத்தகைய நிலை நிலவி வருவதை ஏனோ ஆள்பவர்களும், ஆண்டவர்களும் கண்டுகொள்ளாத நிலையே உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் உள்ளூர் தொழிலாளர்களை ஒதுக்கி வடமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்திக் கொள்ளும் போக்கு அதிகரித்து வருவதுடன், அது தொடர்ந்தும் வருகிறது. வடமாநிலங்களை பொறுத்தவரை பீகார், உத்தரபிரதேசம், ஜார்கண்ட், மேற்குவங்கம், அசாம், மத்திய பிரதேசம், ஒடிசா மாநிலங்களில் வேலைவாய்ப்பின்மை காரணமாக பிழைப்புத்தேடி தமிழ்நாடு, கர்நாடக மாநிலங்களை நோக்கி வந்து கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக தமிழகத்தில் திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள பின்னலாடை தொழிற்சாலைகள், பிற தொழிற்சாலைகள், நீலகிரி மாவட்டத்தில் உள்ள தேயிலை, காப்பி தோட்டங்கள், அனைத்து மாவட்டங்களில் உள்ள கட்டுமான நிறுவனங்கள், போர்வெல் நிறுவனங்கள். உணவகங்கள், ஓட்டல்கள் ஆகியவற்றில் வடமாநில தொழிலாளர்களே பெருமளவில் வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ₹150 முதல் ₹200 வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு, மூன்று வேளை உணவும், தங்குமிடமும் வழங்கப்படுகிறது. உழைப்புக்கான காலநேரம் இல்லை. குறிப்பாக கட்டுமான தொழிலிலும், போர்வெல் நிறுவனங்களிலும் 8 மணி நேரத்துக்கும் அதிகமான நேரம் வடமாநில தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டியெடுக்கப்படுகிறது. 2 பேர் செய்யக்கூடிய பணியை வடமாநில தொழிலாளி ஒருவரே செய்து விடுகிறார். பணியின் போது ஏற்படும் விபத்தில் காயமடைந்தாலோ அல்லது உயிரிழப்பு ஏற்பட்டாலோ கேள்வி எழுவதில்லை. சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்து அனுப்பி வைத்து விடுகின்றனர். இழப்பீடு ஏதும் வழங்கப்படுவதுமில்லை. இத்தகைய தொழிலாளர்களின் நலன்கள் மீது தொழிலாளர் நலத்துறையோ, அது சம்பந்தப்பட்ட அதிகாரிகளோ கண்டுகொள்வதில்லை.

இதுதொடர்பாக தொழிலாளர் நலத்துறையை சேர்ந்த பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் நம்மிடம், ‘வடமாநில தொழிலாளர்கள் எவ்வளவு நேரமானாலும் உழைக்க தயங்காதவர்கள்.  கொடி பிடிப்பதில்லை. குறைந்த கூலியை பெற்றுக் கொள்கின்றனர். எனக்கு தெரிந்து போர்வெல் கம்பெனியில் வேலை செய்யும் தொழிலாளி ஒருவர் மாதம் வெறும் 8 ஆயிரம் மட்டுமே ஊதியமாக பெறுகிறார். அவருக்கு ரேஷன் கடைகளில் கள்ளச்சந்தையில் வாங்கப்படும் அரிசி சாதம் மூன்று வேளையும் வழங்கப்படுகிறது. அவர்கள் எங்கு வேலை செய்கிறார்களோ அங்குதான் அவர்கள் இருப்பிடம். பணியின்போது இறந்தால் கூட அவர்களின் குடும்பத்தினர் கேள்வி கேட்பதில்லை. காயமடைந்தாலும் கேள்வியில்லை. அதனால் முதலாளிக்கும் நஷ்டமில்லை. அவர்களுக்கான அமைப்புரீதியான கட்டமைப்பும் இல்லை. வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள் இதுதான்.

இப்போதைய நிலையில் தமிழகத்தில் மட்டும் மெல்ல, மெல்ல கடந்த 10 ஆண்டுகளில் பெருகியுள்ள வடமாநில தொழிலாளர்கள் அவர்களை சார்ந்தவர்களின் எண்ணிக்கை மட்டுமே 1 கோடியை எட்டும். இவர்களில் இங்கேயே ஆதார் அட்டை, ரேஷன் அட்டை பெற்றவர்கள் மட்டும் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இருக்கலாம். இது போக திருப்பூர், கோவை உட்பட பல மாவட்டங்களில் கென்யா, நமீபியா போன்ற ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்களும் ஊடுருவியுள்ளனர்’ என்றார். நாம் அனைவரும் இந்தியர் என்பதில் மாற்று கருத்தில்லை. அதேநேரத்தில் உள்ளூர் மக்களுக்கான வேலையை பறித்து வடமாநிலத்தவர்களிடம் ஒப்படைப்பது எத்தகைய எதிர்வினையை ஆற்றும் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர வேண்டும். அதேநேரத்தில் குறைந்த கூலியில் தங்கள் உழைப்பை சுரண்ட அனுமதித்துள்ள வடமாநில தொழிலாளர்களின் நலனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

Related Stories: