முறைசாரா உச்சி மாநாட்டை முடித்துக் கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி

சென்னை: முறைசாரா உச்சி மாநாட்டை முடித்துக் கொண்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து பிரதமர் மோடி டெல்லி புறப்பட்டார். பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று சீன அதிபர் ஜின்பிங் இந்தியாவில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மதியம் சென்னை வந்தார். பின்னர் பிரதமர் மோடியுடன் மாமல்லபுரத்தை சுற்றி பார்த்தனர். மேலும் கலை நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தனர். பின்னர் இரவு விருந்து முடிந்ததும், நேற்று இரவு 9.00 மணிக்கு மேல் சீன அதிபர் மாமல்லபுரத்தில் இருந்து காரில் கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலுக்கு வந்து இரவு தங்கினார். பிரதமர் மோடி, காரில் கோவளம் புறப்பட்டு சென்று அங்குள்ள தாஜ் பிஷர்மேன்ஸ் கோவ் ஓட்டலுக்கு சென்று இரவு தங்கினார். இன்று காலை பிரதமர் மோடி தங்கி இருந்த தாஜ் பிஷர்மேன் கோவ் ஓட்டலில் மீண்டும் இரு தலைவர்களும் சந்தித்து பேசினர். கண்ணாடி அறையில் இருந்தபடி கடலையும் இயற்கையும் ரசித்தபடி இரு தலைவர்களும் சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

அதன்பின்னர் இரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கிடையிலான உறவை பலப்படுத்துதல், பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து கோவளம் ஓட்டலில் இருந்து சீன அதிபர் புறப்பட்டார். அவரை ஓட்டல் வாசல் வரை வந்து மோடி வழியனுப்பினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்ட சீன அதிபர், நேராக சென்னை விமான நிலையம் சென்றார். அங்கிருந்து தனி விமானத்தில் தனது குழுவினருடன் நேபாளத்திற்கு புறப்பட்டுச் சென்றார். அதன் பின்னர் பிரதமர் மோடி அங்கிருந்து கிளம்பி திருவிடந்தை சென்றடைந்தார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் சென்னை விமானநிலையம் வந்தடைந்தார். பின்னர் தனது 2 நாள் சென்னை பயணத்தை முடித்துக்கொண்டு டெல்லி புறப்பட்டார். சென்னையில் இருந்து வழியனுப்பும் போது பிரதமர் மோடிக்கு ஆளுநர், முதல்வர் பழனிசாமி நினைவுப் பரிசு வழங்கினர். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் உள்ளிட்டோர் வழி அனுப்பி வைத்தனர்.

மோடி ட்விட்டரில் நன்றி

தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நான் சிறப்பாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். எப்போதும் போல், அவர்களது இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. ஆற்றல் மிக்க இந்த மாநிலத்தின் மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் மாமல்லபுரத்தில் நடைபெற்ற முறைசாரா உச்சி மாநாட்டை சிறப்புற நடத்துவதில் உறுதுணையாக இருந்த தமிழக அரசிற்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Related Stories: