சீனா - தமிழகம் உறவு வலுப்படும்; பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின் பிங் சந்திப்பு தொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் விளக்கம்

சென்னை: பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின் பிங் சந்திப்பு தொடர்பாக வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே விளக்கம் அளித்தார். இரண்டு நாட்களில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜின் பிங்கும் 6 மணி நேரம் உரையாடியுள்ளதாகவும், சென்னை மக்கள் அளித்த அன்பான வரவேற்பு குறித்து சீன அதிபர் பாராட்டு தெரிவித்ததாக விஜய் கோகலே தெரிவித்தார். சீனாவில் இந்தியாவின் முதலீட்டை அதிகரிப்பது தொடர்பான வழி வகைகள் குறித்து ஜின் பிங்குடன் மோடி விவாதித்ததாக குறிப்பிட்ட அவர், இருநாட்டு ஒத்துழைப்புடன் உற்பத்தி தொழில் நிறுவனங்கள் அமைப்பது குறித்தும் ஆராய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்தார். இந்தியா - சீன மக்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

சீனாவின் 70-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு 70 நிகழ்ச்சிகளை நடத்த முடிவு செய்ததாகவும், இந்தியா, சீனாவில் தலா 35 நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கம் அளித்தார். புவி வெப்பமடைவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவித்தார். சீனாவுடனான வர்த்தகத்தில் இந்தியாவுக்கு பாதகமான பற்றாக்குறையை சரிசெய்வது குறித்தும் ஆராய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தியாவில் சீனர்களின் சுற்றுலாவை மேம்படுத்துவது குறித்து பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது 3-வது முறைசாரா உச்சி மாநாட்டை நடத்தவும் இருநாட்டு தலைவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர்.

காஷ்மீர் பற்றி பேசவில்லை

பயங்கரவாத ஒழிப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதித்தாகவும், காஷ்மீர் விவகாரம் குறித்து எதுவும் ஆலோசிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார். பாதுகாப்புத்துறையில் ஒத்துழைப்பு வழங்க இரு தலைவர்களும் சம்மதம் அளித்ததாகவும், பாதுகாப்பு குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தை இருக்கும் என்று விஜய் கோகலே விளக்கம் அளித்தார்.

பிரதமர் மோடிக்கு அழைப்பு

சீனாவிற்கு வருமாறு பிரதமர் மோடிக்கு, சீன அதிபர் ஜி ஜின்பிங் அழைப்பு விடுத்துள்ளார். சீன அதிபர் விடுத்த அழைப்பை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார் என்று விஜய் கோகலே தெரிவித்தார்.

தமிழகம் - சீனா உறவை வலுப்படுத்த ஆலோசனை

தமிழ்நாட்டுக்கும் சீனாவுக்கும் இடையே உறவை மேம்படுத்த மோடி - ஜின்பிங் ஆலோசனை நடத்தியதாக விஜய் கோகலே தெரிவித்தார். சீனாவின் புஜியான மாகாணத்தில் தமிழ் கல்வெட்டு ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், தென்னிந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தக உறவு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது உறுதியாகியுள்ளதாக தெரிவித்தார். தென்னிந்தியா - சீனா இடையே இருந்த தொன்மையான வர்த்தக உறவு பற்றி மேலும் ஆராயவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related Stories: